தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சில மாதங்களுக்கு முன் அவரது நடிப்பில் வெளிவந்த மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது அவரது 50வது படம். மகாராஜா படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் அதிகளவில் வருகின்றன. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ட்ரெயின், விடுதலை 2 ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.
இதற்கிடையே இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டராக ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்கிறார். கதாநாயகியாக சமீபத்தில் சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்ட நித்யா மேனன் நடிக்கிறார். புதுக்கோட்டையில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 40 நாட்களுக்கு படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க உள்ளது.
இந்நிலையில் நடிகர் விமல் நடித்த சார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், இது பள்ளிக்கூடம் பற்றிய கதை என்பதால் இந்த படத்திற்கு சார் என டைட்டில் வைத்திருக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சரவணன், சார் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார் என நடிகர் விஜய் சேதுபதி பெருமையாக சார் படம் குறித்து மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த நடிகர் சரவணன், விஜய் சேதுபதியின் காலை தொட்டு கும்பிட்டார்.
அவரது இந்த செயலால் பயங்கர கோபமடைந்த விஜய் சேதுபதி, பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க சார், என்று மேடையில் திட்டியது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் பேசிய நடிகர் சரவணன், நான் இன்னொரு படத்தில் விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடிக்கிறேன். அதனால் தான் அப்படி சொல்கிறார், என விளக்கம் கொடுத்து சமாளித்தார்.
எனினும் 1990களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் சீனியர் நடிகர் சரவணனை, பெரிய மனுஷன் மாதிரி மரியாதையா நடந்துக்குங்க சார் என்று அவர் பல பேர் முன்னிலையில் மேடையில் கடுப்பாக சொன்னது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் சேதுபதி தன்னை பெருமையாக பேசியதற்கு மகிழ்ச்சி, நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் காலை தொட்டு கும்பிட்டார். அதுதான் பெரிய பண்பு, பெரிய மனுஷத்தனம் என்று விஜய் சேதுபதிக்கு பலரும் பதிலடி தந்து வருகின்றனர்.





