நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் கிளைமேக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகளே ஷூட் செய்யப்பட வேண்டி உள்ளது. இதற்காக நாளை ( மார்ச் 1) படப்பிடிப்புக்குழு ரஷ்யா செல்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் 31க்குள் முடித்துவிடும் விஜய், ஏப்ரல் மாதத்தில் மதுரையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த இருக்கிறார். அப்போது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொள்கைகள், லட்சியம், கட்சிக்கொடி உள்ளிட்ட விவரங்களை அறிவிக்க இருக்கிறார். மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் கமகம மட்டன் பிரியாணி வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
அரசியல் கட்சி பணிகளுக்கு இடையே, அடுத்து ஒரு படத்தில் நடிக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். அந்த படத்துடன் சினிமா நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, முழுநேர அரசியலில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு பிற்காலத்தில் தேவைப்பட்டால், விஜய் கேமியோ ரோலில் ஏதும் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆனால் இந்த திட்டமிடல் எல்லாம், விஜய் 2026ம் ஆண்டில் பெருவாரியான தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம், வெற்றி பெற்று, விஜய் தமிழக முதல்வர் ஆகும்பட்சத்தில்தான். இல்லை எனில் அவரது கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காத பட்சத்தில், மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் எனவும் சினிமாத்துறை சார்ந்த சிலர் கூறிவருகின்றனர். ஏனெனில் சரத்குமார், சீமான், கமல் போல ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிக்காக அவர் கட்சியில் நீடித்திருக்க வாய்ப்பில்லை.
இந்த சூழலில் தற்போது விஜய் 69 படத்தை தயாரிக்கப் போவது, ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் என்பது உறுதியாகி உள்ளது. படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், அட்லி, கார்த்திக் சுப்பராஜ், தெலுங்கு டைரக்டர் திரிவிக்ரம் என பலரது பெயர்கள் அடிபட்டது. இப்போது விஜய் 69 படத்தை இயக்க, 2 பேரை தேர்வு செய்துள்ளார். அவர்களில் ஒருவர் இயக்க வாய்ப்புள்ளது.
பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கும், பேட்ட படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் இருவரையும் கடைசியாக விஜய் தேர்வு செய்திருக்கிறார். இருவரிடமும் கதை கேட்ட விஜய், இருவருமே முழு ஸ்கிரிப்ட்டையும் ரெடி பண்ணி தருமாறு கூறியுள்ளார். இந்த இரண்டு பேரில் ஒருவருக்கு விஜய் 69 படத்தை இயக்க விஜய் ஒப்புதல் தர முடிவு செய்திருக்கிறார். ஒருவேளை ஆர்ஜே பாலாஜியை விஜய் ஓகே செய்தால், அது ஆர்ஜே பாலாஜிக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.





