நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன், இயக்குனர் செல்வராகவனின் தம்பி, நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற அடையாளங்களை கடந்து தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக தனக்கென ஒரு இடத்தை திறமையால், உழைப்பால் பிடித்திருக்கிறார் நடிகர் தனுஷ் என்றால் அது மிகையல்ல.
ஏற்கனவே ப பாண்டி என்ற படத்தை இயக்கியுள்ள நடிகர் தனுஷ், தனது முதல் படத்தில் ராஜ்கிரண், ரேவதியை நடிக்க வைத்தார். பிறகு தனது அக்கா மகன் ஹீரோவாக நடித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ள நடிகர் தனுஷ், தனது 50வது படத்தை அவரே டைரக்ட் செய்து, நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
ராயன் படத்தில் தனுஷ் உடன் காளிதாஸ் ஜெயராம், அபர்ணா முரளி, எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சரவணன், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்தது.
இந்த விழாவில் பேசிய நடிகர் தனுஷ் தன்னை பற்றிய உருவக்கேலி, மோசமான விமர்சனங்கள் குறித்து பேசினார். மேலும் போயஸ்கார்டனில் வீடு கட்டியது குறித்தும் பேசினார். தனது பிள்ளைகள், ரசிகர்கள், குடும்பம், பெற்றோர் குறித்து பேசிய தனுஷ், என்னை படைத்த என் சிவனுக்கு என்னைப் பற்றி தெரியும், என் பெற்றோருக்கு தெரியும், என் பசங்களுக்குத் தெரியும் என தன்னை பற்றி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இப்போதைய சூழலில், நடிகர் தனுஷூக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வரவேற்பும், வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இப்போது ராயன் படத்தை தொடர்ந்து, குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் இரண்டு பாகங்களாக இயக்கப்படுகிறது. அதில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
இதற்கிடையே ராயன் படம் நாளை ரிலீஸ் ஆவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் தணிக்கைக் குழு வழங்கிய நிலையில், படத்தை பார்த்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அப்படியே படத்தை வெளியிட கூறியிருக்கிறார். ஏனெனில் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறியும் இருக்கிறார். மேலும், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், இதுவரை ப்ரீ புக்கிங் வசூலாக மட்டும் ரூ. 5 கோடியை ராயன் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





