தற்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் மிகவும் கவனிக்கத் தக்கவர் சாய் அபயங்கர். இவரது இசையில் வெளியாகி இருக்கும் ஆல்பம் எல்லாம் சக்கை போடு போட்டு வருகிறது. இணையத்தில் தெறிக்க விடும் பாடல்களை கொடுத்திருக்கும் அவருக்கு, தமிழ் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் தயாரித்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார் சாய் அபயங்கர். இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார், ராகவா லாரன்ஸ். எல் சி யு கான்செப்டில் இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய வாய்ப்பை பெற்றார் சாய் அபயங்கர். சூர்யா தற்போது 45 வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆர் ஜே பாலாஜி இயக்கும் இந்த திரைப்படத்தில் திரிஷா, லப்பர் பந்து சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானவர் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு முதலில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் திடீரென ப்ராஜெக்டில் இருந்து அவர் விலகிக் கொள்ள, அந்த இடத்தை பிடித்தார் சாய் அபயங்கர். பெரிய நட்சத்திரங்களின் படத்திற்கு இசையமைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் பலரும் திரும்பி பார்க்கும் இசையமைப்பாளராக அவர் மாறினார்.
இதுபோக அட்லியின் அடுத்த திரைப்படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அல்லு அர்ஜுன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது சிம்புவின் 49வது திரைப்படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ஒரு கல்லூரி மாணவர் கேங்ஸ்டர் ஆக இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒன் லைனை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.





