கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் கவனம் செலுத்துவது சமீபத்தில் அதிகரித்துவருகிறது. ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனியும் திரைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
அதன்படி தோனி என்ட்டெர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். அதன் மூலம் எந்தப் படத்தை முதலில் தயாரிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவருக்கும் தமிழ்நாட்டின் மீது அபரிமிதமான அன்பு இருக்கிறது. அதனை நிரூபிக்கும் விதமாக லெட்ஸ் கெட் மேரிட் என்ற தமிழ் படத்தை தயாரிக்கிறார்.
ஹரிஷ் கல்யாண், இவானா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் அந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார். படத்துக்கு அவரே இசையமைத்தும் இருக்கிறார். சமீபத்தில்தான் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தோனி, அவரது மனைவி சாக்ஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ட்ரெய்லரை பார்க்கும்போது படம் பக்கா ஃபேமிலி எண்ட்டெர்டெயினராக உருவாகியிருப்பது உறுதியாகிறது. படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த எல்ஜிஎம் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியின் மனைவி சாக்ஷி பேசுகையில், “நான் அல்லு அர்ஜுனின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் எல்லாம் அப்போது இல்லை. யூட்யூபில்தான் பார்த்தேன். கோல்டுமைன் புரொடக்ஷன் நிறுவனம் தெலுங்கு படத்தை ஹிந்தியில் வெளியிடுவார்கள். அதை பார்த்து வளர்ந்தவள் நான்” என்றார்.
இதைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் தோனி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அவ்வளவு அன்பு வைத்திருப்பவர்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால் சாக்ஷியோ தமிழ் சினிமாவிலிருந்து ஒரு ஹீரோவைக்கூட சொல்லவில்லையே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதேசமயம் படத்தின் புரோமோஷனுக்காகத்தான் சாக்ஷி அவ்வாறு பேசியிருக்கிறார் என்றும் ஒரு தரப்பினர் பேசிவருகின்றனர்.





