கூலி படம் திரைக்கு வர இன்னும் 2 தினங்கள்தான் இருக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை திரையில் எதிர்பார்த்து இந்தியா முழுவதும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுவரை ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மட்டுமே 65 கோடி ரூபாயை கடந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 நாட்களுக்கு தியேட்டர்கள் ஹவுஸ்புஃல் என்றும் கூறப்படுகிறது.
எப்போதுமே ரஜினி படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் நாள் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் போல ஒரு திருவிழா தான். கூலி ரிலீஸ் நாளில் சில நிறுவனங்கள் வருகிற 14ம் தேதியன்று விடுமுறை அறிவித்து ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை அளித்திருக்கின்றன. நண்பர்களுடனும் குடும்பங்களுடனும் கூலி படத்தை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த சூழலில் கூலி படம் எப்படியும் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைக்கும். இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூலை தொட்டது இல்லை. ஆனால் தெலுங்கு கன்னடம் இந்தி படங்கள் அந்த சாதனையை பலமுறை செய்துவிட்டன. குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் மலையாள படங்கள் இந்த லிஸ்ட்டில் சேர வாய்ப்பில்லை. ஆனால் தமிழ் படம் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்யாதது இன்னும் ஒரு குறையாக தான் இந்திய சினிமாவில் பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் கூலி படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் இயக்குனர் இசையமைப்பாளர் உள்ளிட்டோருக்கு படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள கூலி படத்திற்கு சம்பளம் மட்டும் படத்தின் பட்ஜெட்டில் பாதி வரை கொடுக்கப்பட்டுள்ளது.
கூலி படத்தில் நடித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ. 150 கோடி இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு ரூ. 50 கோடி இந்தி நடிகர் அமீர்கானுக்கு ரூ. 20 கோடி இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ. 15 கோடி தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கு ரூ. 10 கோடி என சம்பளம் வாரி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் நடிகர் சத்யராஜூக்கு ரூ. 5 கோடி நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ரூ. 4 கோடி கன்னட நடிகர் உபேந்திராவுக்கு ரூ. 4 கோடி மலையாள நடிகர் சௌபின் சாகிருக்கு ரூ. 1 கோடி, கூலிபடத்தில் மோனிகா பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்ட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ரூ. 3 கோடி என இவர்களுக்கு மட்டுமே 262 கோடி சம்பளமாக தரப்பட்டுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 350 கோடிக்கு மேல் என்றும் சொல்லப்படுகிறது.





