தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்கள் ஏராளமானவர் இருந்தாலும் அவர்களின் குறிப்பிட்டத்தக்க அளவுக்கு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மகேஷ் பாபு. கமர்சியல் திரைப்படங்களின் கிங்காக விளங்கி வரும் அவர், எண்ணற்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அவரது ஆக்சன் காட்சிகளை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் திரளும்.
சென்னையிலும் மகேஷ் பாபுவுக்கு என ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அண்மையில் அவர் நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்படியான சூழலில் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியுடன் கைகோர்த்து இருக்கிறார் மகேஷ் பாபு. இது அவரின் 29 வது திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
ஏற்கனவே, நான் ஈ, பாகுபலி போன்ற பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் ராஜமவுலி. இதில், பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இதே போல் ஆர் ஆர் ஆர் திரைப்படமும், இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமா அரங்கில் கவனத்தை ஈர்த்தது. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல், ஆஸ்கர் விருது பெற்று இந்திய சினிமாவுக்கு கௌரவத்தை சேர்த்தது.
இப்படியான சூழலில்தான் தற்போது மகேஷ்பாபு உடன் கைகோர்த்து இருக்கிறார் ராஜமவுலி. இந்த திரைப்படம் இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். மலையாள நடிகர் பிரித்வி ராஜுக்கும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தினார்கள். தொடர்ந்து வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாகவும் பிரம்மாண்டமான முறையிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபு அடுத்ததாக இயக்குனர் சந்தீப் ரெட்டியுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படத்தை எடுத்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் சந்தீப் ரெட்டி. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் பாலிவுட்டில் அனிமல் திரைப்படத்தை இயக்கி அலற வைத்தார். இப்படியான சூழலில் அவருடன் மகேஷ்பாபு இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், தெலுங்கு சினிமாவில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





