கவுண்டமணிக்கு பிறகு கவுண்ட்டர் காமெடிக்கு பெயர் போனவராக திகழ்ந்து வரும் சந்தானம், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார். “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமாக ஆன சந்தானம், அதன் பின் சில திரைப்படங்களில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து தற்போது தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.

சந்தானம் மெட்ராஸ் பாஷையில் பேசும் பல காமெடி வசனங்கள் ரசிகர்களிடையே பிரபலமடைவது வழக்கம். “நீ என்ன பெரிய அப்பாடக்கரா?” என்று அவர் கலாய்க்கும் வசனத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். இது போல் பல வார்த்தைகள் ரசிகர்களிடம் வைரலாக வலம் வருவது உண்டு.
சந்தானம் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிறு சிறு வேடங்களிலேயே நடித்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு நடந்த சம்பவத்தை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

“நான் ‘என் கண்ணில் ஏன் விழுந்தாய்’ என்று ஒரு படத்தில் நடித்தேன். அவர்கள் வருஷத்திற்கு ஒரு முறைதான் என்னை அழைத்து நடிக்க வைப்பார்கள். அதன் பின் திரும்ப அடுத்த வருஷம்தான் அழைப்பார்கள். ஹீரோவுக்கும் வயசாகிவிட்டது, ஹீரோயினுக்கும் வயசாகிவிட்டது.
நானும் வளர்ந்துவிட்டேன். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. தேவைப்படும்போதுதான் என்னை அழைப்பார்கள். 4 அல்லது 5 வருடங்கள் அத்திரைப்படத்தை படமாக்கிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் காரில் அழைத்துச் சென்று ஹைவேஸில் நடு ரோட்டில் இறக்கிவிட்டார்கள். என்னை அங்கே நிற்கச் சொல்லிவிட்டு வாக்கி டாக்கீயை கையில் கொடுத்துவிட்டு தூரமாக போய்விட்டார்கள். அங்கிருந்து வாக்கி டாக்கீயில், ‘சார், இது காமெடி சீன் சார், எதாவது காமெடி பண்ணுங்க சார்’ என கூறினார்கள். ஹைவேஸில் தனியாக நிறுத்திவிட்டு காமெடி பண்ண சொன்னால் என்னய்யா பண்றது என்றேன். என் கண்ணில் ஏன் விழுந்தாய்க்கு பதிலா நான் ஏன் இவுங்க கண்ணில் விழுந்தேங்குற மாதிரி ஆகிடுச்சு” என்று தனக்கு நடந்த சம்பவத்தை சந்தானம் கலகலப்பாக கூறினார்.





