நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி ஷோவில் நடித்துக்கொண்டு இருந்தவர். தமிழில் ஹிட்டான படங்களை அப்படியே காமெடியாக உல்டாவாக்கி கலாய்த்து தள்ளுவதுதான் இந்த ஷோவின் பிரதான நோக்கம். ஆனால் லொள்ளு சபா பார்த்தவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அளவுக்கு கண்டென்ட் ரசிக்கும்படியாகவும் அந்த கலைஞர்களின் நடிப்பும் வேற லெவலிலும் இருந்தது.
லொள்ளு சபா ஷோவில் சந்தானம் நடிப்பு திறமையை பார்த்து வியந்த நடிகர் சிம்பு அவரது மன்மதன் வல்லவன் படங்களில் சந்தானத்தை நடிக்க வைத்தார். சந்தானம் காமெடி பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் சந்தானம் காமெடி செய்து முன்னணி காமெடி நடிகராக மாறினார்.
கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் காமெடி பார்த்து அலுத்துப் போன ரசிகர்களுக்கு சந்தானம் காமெடி சற்று வித்யாசமாக இருந்தது. குறிப்பாக இவரது பஞ்ச் டயலாக்குகள் சட்டென ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்தன. குறிப்பாக விஜய் விஷால் ஆர்யா உதயநிதி ஜெயம் ரவி படங்களில் சந்தானம் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது.
அதன்பிறகு ஒரு கட்டத்தில் நாயகனாக நடிக்கத் துவங்கிய சந்தானம் பல வெற்றிப் படங்களை கொடுத்தார். குறிப்பாக சபாபதி லட்டு தின்ன ஆசையா ஏஒன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் டிடி ரிடர்ன்ஸ் டிக்கிலோனா வடக்குப்பட்டி ராமசாமி குலுகுலு கிக் இனிமே இப்படித்தான் பாரிஸ் ஜெயராஜ் டகால்டி போன்ற படங்கள் சந்தானத்துக்கு பெரிய வெற்றியை கொடுத்தன.
இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு சுந்தர் சி இயக்கத்தில் மதகஜ ராஜா என்ற படம் வெளியானது. 12 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த படத்தில் காமெடி ரோலில் சந்தானம் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக காமெடி நடிகர்கள் பஞ்சம் நீடித்து வருவதால் சந்தானம் மீண்டும் காமெடி ரோல்களில் நடிக்க முன்வர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
இதற்கிடையே பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 49வது படத்தில், சந்தானம் காமெடி ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். டான் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்க நடிகர் சந்தானத்துக்கு ரூ. 7 கோடி சம்பளம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பல ஹீரோ நடிகர்களின் சம்பளம் இன்னும் ரூ. 5 கோடியை தாண்டாத நிலையில் சந்தானம் ரூ. 7 கோடி சம்பளம் என்பது ஹீரோக்களை மிஞ்சிய சம்பளம்தான் என்று ரசிகர்கள் ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.





