தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி ஆரம்பத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை. அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் காதலிக்க நேரமில்லை என பல படங்கள் பிளாப் ஆனது.
இதையடுத்து இப்போது கராத்தே பாபு ஜீனி ஆகிய படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஒருவேளை ஜெயம் ரவி என்ற பெயர்தான் இந்த தோல்விகளுக்கு காரணமோ என கருதி அவர் இப்போது ரவி மோகன் என தது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் ரவி மோகன் என மாற்றிய பிறகும் காதலிக்க நேரமில்லை படம் ஓடவில்லை.
கராத்தே பாபு ஜீனி ஆகிய இந்த படங்களில் நாயகனாக நடித்துள்ள ரவி மோகன், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். இதில் ஹீரோ சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதெல்லாம் ஹீரோக்களும் வில்லனாக நடிப்பது டிரண்ட் ஆகி விட்டதால் அந்த முயற்சியிலும் ரவி மோகன் இறங்கியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ரவி மோகன் தான் ஆரம்பித்துள்ள ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் சொந்தமாக அவரே ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் ரவி மோகன்தான் கதாநாயகன். மற்றொரு முக்கிய கேரக்டரில் எஸ்ஜே சூர்யாவும் நடிக்கிறார். இந்த படத்தை வடக்குப்பட்டி ராமசாமி படத்தை இயக்கிய கார்த்திக் யோகி டைரக்ட் செய்கிறார்.
அதே போல் நடிகர் யோகிபாபு நடிக்கும் ஒரு புதிய படத்தை நடிகர் ரவி மோகன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை திரைக்கதை நடிகர்கள் குறித்த எதுவும் இன்னும் முடிவாகவில்லை. யோகிபாபு நடிக்கும் படத்தை ரவி மோகன் இயக்குவது மட்டுமே முடிவாகி உள்ளது.
நடிகர் ரவி மோகன் அவர் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கும் வேளையில், அவரே டைரக்ட் செய்யும் யோகிபாபுவின் படத்தையும் அவரே தயாரிக்க வேண்டியதுதானே, எதற்காக வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ரவி மோகன் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் சரியாக போகவில்லை என்றால் பலத்த நஷ்டம் வரும் என்பதால் உஷாராக ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்காமல் நடிகர் ரவி மோகன் நழுவி விட்டார் என்றும் கூறப்படுகிறது.





