எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இந்த திரைப்படம் வெளியாகி இருந்த சமயத்தில் அப்படி ஒரு படம் ரிலீஸ் செய்யப்பட்டு இருப்பதாகவே பலருக்கும் தெரியாது. அதன் பிறகு விமர்சனங்கள் நன்றாக அமைய, அது பற்றி பலருக்கும் தெரிய வர எட்டு தோட்டாக்கள் திரைப்படம் வரவேற்பு பெற ஆரம்பித்தது.
காவலர் கதாபாத்திரத்தில் வரும் ஹீரோவின் துப்பாக்கி தொலைந்து போக, அதன் பிறகு நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைக்கதையை அமைத்திருந்தார் ஸ்ரீ கணேஷ். காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு, அழுத்தமான வசனங்கள், துல்லியமான திரைக்கதை என இந்த திரைப்படம் காண்போர் பலருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல், எம் எஸ் பாஸ்கர் தனது உடல் மொழியிலும் வசனத்திலும் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியத்தை உண்டு பண்ணினார். இப்படி இயக்குனர் ஸ்ரீ கணேசுக்கு முதல் திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைய, அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
எட்டு தோட்டாக்கள் இயக்குனர் என்பதால் பலரும் இந்த திரைப்படத்தின் மீது ஆர்வமாக இருக்க அந்த எதிர்பார்ப்பை இது பூர்த்தி செய்யவில்லை. இப்படியான சூழலில்தான் 3 பி ஹெச் கே என்னும் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் ஸ்ரீ கணேஷ். சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீரா ரகுநாத், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சரத்குமார் தேவயானி இணைந்து நடித்த சூரியவம்சம் திரைப்படம் பலருக்கும், இன்று வரை பேவரைட் லிஸ்டில் முதன்மை திரைப்படமாக இருக்கும் சூழலில், மறுபடியும் இந்த இணை ஒரு குடும்பத் திரைப்படத்தில் இணைந்து இருப்பதால் அதன் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இப்படியான சூழலில் படத்திலிருந்து ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்கள். ஒரு நடுத்தர குடும்பத்திற்கு வீடு என்பது எவ்வளவு பெரிய கனவாக இருக்கும் என்பதைதான் இயக்குனர் படத்தில் பேசி இருக்கிறார் என்பது அதன் டிரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.
ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும், அது இடம்பெற்றிருக்கும் விதமும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. சரத்குமாரின் மகனாக நடித்திருக்கும் சித்தார்த்திற்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. வரும் ஜூலை நான்காம் தேதி 3 பிஎச்கே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.





