ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகினாலும், அவற்றில் ஒரு சில படங்களே ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படுகின்றன. அதிலும் பத்தாண்டு, இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறையே வசூல், விமர்சனம், ரசிகர்கள் பாராட்டு என அனைத்தையும் தாண்டி ஒரு ட்ரெண்ட் செட்டர் படமாக அமைகின்றன.

அப்படி தமிழ் சினிமாவில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரெண்ட் செட்டராக அமைந்த திரைப்படம் சுப்பிரமணியபுரம். 2008 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தை, இயக்கி இருந்தார் சசிகுமார். இயக்குனர் பாலா மற்றும் அமீரிடம் சினிமா பயின்ற அவர், தனது முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார்.
வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள், உள்ளூரில் அரசியல் அதிகாரமிக்க ஒரு குடும்பத்தில் உறவில் சிக்கி அது துரோகமாக மாற பின்னர் என்ன நடந்தது என்பதை அழுத்தமாக காட்சிப்படுத்தி இருப்பார் சசிகுமார். மதுரை மண்ணையும், அங்குள்ள களத்தையும் மண்வாசனை மாறாமல் எடுத்திருந்த சசிகுமார், சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை உயிரோட்டம் உள்ள கதையாக மாற்றினார்.

1980களில் மதுரையின் வாழ்க்கைச் சூழலை கண்முன்பே காட்சிப்படுத்தியிருந்த இயக்குனர், அங்குள்ள நட்பு, பாசம், அன்பு, துரோகம், காதல் வீரம் என அனைத்தையும் ஒரு சேர கொண்டு வந்து ரசிகர்களை கண்ணிமைக்காமல் திரையரங்கிலேயே அமர வைத்து கைத்தட்டல்களை பெற்றார். ஜேம்ஸ் வசந்தன் இசையில், பாடல்களும் மெகா ஹிட் ஆக இன்று வரை சுப்பிரமணியபுரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் பிறகு ஈசன் என்னும் படத்தை இயக்கிய சசிகுமார், திடீரென நடிப்பு பக்கம் திரும்பினார். ஆனால் இத்தனை வருடங்களில் அவருக்கு அயோத்தி திரைப்படத்தை தவிர வேறு எந்த திரைப்படமும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை கொடுக்கவில்லை. அவர் இயக்கத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்க, இந்த சூழலில்தான் சுப்பிரமணியபுரம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், “சுப்பிரமணியபுரம் ரீ ரிலீஸ்க்கு நான் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தில் நான் எதையும் நீக்கவில்லை. சுவாதியை கொல்வாரா என்பதை பார்வையாளர்களின் முடிவுக்கு விட்டு விட்டோம். இந்தப் படத்தை ரசிகர்கள் இன்றும் விரும்பி கொண்டாடுவதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். அடுத்ததாக குற்றப்பரம்பரை வெப் சீரிஸ் இயக்குகிறேன். செப்டம்பர் மாதம் இதற்கான படப்பிடிப்பு நடைபெறும்” என்று தெரிவித்தார்.





