இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் சசிக்குமார். பிறகு சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் மாறினார். இந்த படத்தில் வில்லனாக சமுத்திரக்கனி நடித்திருந்தார். அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்த நாடோடிகள் படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
தொடர்ந்து நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்துக் கொண்டிருக்கிறார் சசிக்குமார். சுந்தரபாண்டியன் குட்டிப்புலி ஈசன் போராளி நாடோடிகள் 2 என பல படங்களில் சசிக்குமார் நடித்தாலும் அவரது சினிமா பயணத்தில் அயோத்தி படம் அதிக கவனம் பெற்ற முக்கிய படமாக உள்ளது.
இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கிய அயோத்தி படத்தில் வடமாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட அவரது சடலத்தை மீண்டும் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதுதான் படத்தின் மையக்கரு. இந்த படத்தில் வாகன ஓட்டுனராக நடிகர் சசிக்குமார் நடித்திருப்பார். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பாராட்டை பெற்ற படமாக இருந்தது.
இப்போது நடிகர் சசிக்குமார் சிம்ரன் இருவரும் இணைந்து நடித்த டூரிஸ்ட் பேமிலி என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் முதன்முறையாக சசிக்குமார், சிம்ரன் ஜோடி இணைந்திருக்கிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பேட்ட படத்தில் நடித்திருந்தாலும் அதில் ரஜினிக்கு சிம்ரன் ஜோடியாக நடித்திருப்பார். சிம்ரன் சசிக்குமார் அந்த படத்தில் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை.
இதற்கிடையே தற்போது டூரிஸ்ட் பேமிலி படத்தின் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. அந்நிகழ்ச்சியில் நடிகர் சசிக்குமார் கூறியதாவது, நான் நடித்த அயோத்தி படம் மூலம் ஒரு நன்மை நடந்திருக்கிறது. விமானத்தில் சடலத்தை கொண்டு செல்வதற்கு தேவையான நடைமுறையை எளிமையாக மாற்றி ஒரு லட்சம் ரூபாய் வரை மானியமும் கொடுக்கிறார்கள்.
இதனால் இதுவரை 500 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என என்னிடம் ஒருவர் பேசும்போது இந்த தகவலை சொன்னார். எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நிகழ்ந்திருக்கிறது என்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று நடிகர் சசிக்குமார் நெகிழ்ச்சியாக தெரிவித்தார். அயோத்தி படத்தில் இறந்தவர் உடலை விமானத்தில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்களை தான் அந்த படம் முழுவதுமாக பேசியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





