நடிகர் விஜய்சேதுபதி ஆரம்பத்தில் புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர். அதாவது ரோல் பெயரோ, வசனமோ இருக்காது. ஆனால் கூர்ந்து பார்த்தால் அவர் நடித்திருப்பது தெரியும், அல்லது ஓரிரு வசனங்கள் பேசியிருப்பார்.
அவரைப் போல், சூரியும் சினிமாவில் போராடி முன்னிலைக்கு வந்தவர். ஆரம்பத்தில் காதல், தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் சில காட்சிகளில் தென்படுவார், ஓரிரு வசனங்களும் பேசுவார். ஆனால் அவரும் அப்போது சூரி என்று தெரியாது. இப்போது பார்த்தால்தான் அது சூரி என்பதே தெரியும்.
இப்படி சூரியும், விஜய் சேதுபதியும் ஆரம்பத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து சினிமாவில் முன்னுக்கு வந்தவர்கள். காமெடி நாயகனாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சூரி, இப்போது கதாநாயகனாக தமிழ் சினிமாவில் முன்னேறி இருக்கிறார். விடுதலை, விடுதலை 2, கொட்டுக்காளி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அதே போல் விஜய் சேதுபதியும் இப்போது முன்னணி நாயகனாக இருக்கிறார். இந்தியில் ஜவான் படத்திலும் நடித்து, பாலிவுட்டுக்குள் சென்று வந்து விட்டார். கதாநாயகன், வில்லன், கேமியோ ரோல்களில் நடித்து தொடர்ந்து அசத்தி வரும் விஜய் சேதுபதி, இப்போது மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.
இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சசிக்குமார் ஹீரோவாகவும், சூரி முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ள இந்த படத்தின் டிரெயிலர் வெளியீடு, இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கொஞ்சமும் சசிக்குமார் பற்றி யோசிக்காமல், விஜய் சேதுபதி மற்றும் சூரியை மட்டுமே புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
ஆனால் சசிக்குமார், மிகப்பெரிய இயக்குனர். தயாரிப்பாளர், சிறந்த நடிகர். சுந்தரபாண்டியன் படத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்த போது நண்பராக சூரியும், வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடித்திருப்பர். அப்போது சூரிக்கு இருந்த அறிமுகம் கூட விஜய் சேதுபதிக்கு இல்லை. ஆனால் அப்போதே சுப்ரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் என வெற்றிப் படங்களில் நடித்தவர். இப்படியிருக்க சசிக்குமாரை மேடையில் வைத்துக்கொண்டு, அவரை கண்டுக்கொள்ளாமல் சூரி, விஜய்சேதுபதியை மட்டுமே பாராட்டியது ரசிகர்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.





