நடிகர் சத்யராஜ், தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் ஒரு முன்னணி நடிகர். துவக்கத்தில் வில்லனாக இருந்த அவரை, கடலோர கவிதைகள் படம் மூலம் கதாநாயகனாக மாற்றியவர் டைரக்டர் பாரதிராஜா. அதன் பிறகு பல படங்கள் ஹீரோவாக நடித்த சத்யராஜ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சத்யராஜை பொருத்த வரை வில்லன் கேரக்டரில் ரசிகர்களை மிரட்டியவர் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக 24 மணி நேரம், 100வது நாள், காக்கிச்சட்டை, நான் சிவப்பு மனிதன், பகல் நிலவு போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதே நேரத்தில் வேதம் புதிது போன்ற படங்களிலும் அவர் நடித்து, தன் திறமையை வெளிப்படுத்தினார்.
கடந்த சில ஆண்டுகளாக நயன்தாரா, இவானா போன்ற ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடிக்கும் சத்யராஜ், அவ்வப்போது போலீஸ் அதிகாரி, டாக்டர், வக்கீல் போன்ற கேரக்டர்களிலும் நடிக்கிறார். குறிப்பாக பாகுபலி படத்தில் கட்டப்பா போன்ற கேரக்டரில் சத்யராஜை தவிர வேறு யாரும் அவ்வளவு சிறப்பாக அதில் பொருந்தியிருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.
சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ரஜினி, கமல் படங்களில் அதிகமாக நடித்தவர் சத்யராஜ். ஆனால் ஒரு கட்டத்தில் ரஜினி சத்யராஜ் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. குறிப்பாக மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.
இந்த நிலையில், தற்போது கூலி படத்தில் சத்யராஜ், ரஜினிகாந்த் நண்பராக நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் ரஜினியுடன் சத்யராஜ் இணைவதால், அடுத்தடுத்த படங்களில் அவர்கள் சேர்ந்து நடிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளது. ஏனெனில் சத்யராஜ் நடிப்பு இப்போதும் தரம் குறையாமல் இருந்து வருகிறது.
சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சத்யராஜ், கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதை அவர்களே அதிகாரபூர்வமாக தெரிவித்து விட்டனர். ஆனால் படம் குறித்து ஏதாவது பேசினால், என்மீது கேஸ் போட்டு விடுவார்கள். ஏனென்றால் அக்ரிமெண்டே அப்படிதான் போடப்பட்டுள்ளது. அதனால் படம் பற்றிய தகவல்களை என்னால் எதுவும் சொல்ல முடியாது, என சத்யராஜ் ஜாலியாக குறிப்பிட்டு பேசினார்.





