சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான “ஜெயிலர்” திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய உரையாடல் அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இருந்தது. ஏனெனில் அந்த நிகழ்ச்சியின் போது தான் நிரந்த சூப்பர் ஸ்டார் என்பது போன்று ரஜினி சுற்றி வளைத்து கூறியிருந்தார். அதேவேளையில் விஜய்யின் ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பேசி வருகின்றனர்.

இதன் காரணமாக சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று விவாதம் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. ஆனால் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று கூறி வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே வாரிசு பெற இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் சரத்குமார் பேசுகையில் : அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று ரஜினிக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் பேசியிருந்தார். அப்போதே இந்த விடயம் பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த சம்பவம் நடைபெற்று நீண்ட நாட்களான பின்னர் தற்போது சரத்குமாருக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் சத்யராஜ் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதன்படி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சத்யராஜிடம் சூப்பர் ஸ்டார் பட்டம்? குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வழக்கம் போல் அவர் ரஜினிகாந்துக்கு எதிராக ஒரு கருத்தை சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக தனது கருத்தினை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த வகையில் சத்யராஜ் கூறும் போது : சூப்பர் ஸ்டார் என்றாலே 45 வருடமாக ரஜினி சார்தான் ஞாபகத்துக்கு வருகிறார், அதை மாற்றக்கூடாது. ஏனெனில் ஆரம்பகட்டத்தில் வசூலில் சாதனை புரிந்த பாகவதர் ஏழிசை மன்னர் என்று தான் அழைக்கப்பட்டார்.
அதேபோல் நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி தான். மக்கள் திலகம் என்றால் அது எம்.ஜி.ஆர் தான். தசாவதாரம் படத்தில் கமல் சூப்பராக நடித்தார் என்பதற்காக அவர் அவரை நடிகர் திலகம் என்று கூறிவிட முடியுமா? உலகநாயகன் என்றால் அது கமல் தான். தளபதி என்றால் விஜய். தல என்றால் அஜித். அதே போன்று சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் ஒருவர் தான் என இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த கேள்விக்கு அவர் தனது பதிலின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





