கரூரில் நேற்று இரவு நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆண்கள் 13 பேர் பெண்கள் 17 பேர் சிறுவர்கள் 5 பேர் சிறுமிகள் 4 பேர் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்தவுடன் நேற்றிரவு சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கரூர் வந்த நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தனது பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, தாங்க முடியவில்லை; இரவு என்னால் தூங்க முடியவில்லை. மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது. அந்த மரணங்களுக்கு முன்னும் பின்னுமான மனிதத் துயரங்கள் கற்பனையில் வந்து வந்து கலங்க வைக்கின்றன.
பாமர தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா? இந்த வகையில் இதுவே கடைசி துயரமாக இருக்கட்டும். ஒவ்வோர் உயிருக்கும் என் அஞ்சலி. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல். இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வதே இந்த நீண்ட துயரத்துக்கு நிரந்தர நிவாரணம். ஆடும் உடம்பு அடங்குவதற்கு நாளாகும் என்று அந்த பதிவில் வைரமுத்து கூறியிருக்கிறார்.
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கூட்டம் என்ற ஒற்றை வார்த்தைக்கு பின் 10, 100, 1000, 100000000000… போன்ற பூஜ்ஜிய உயிர்களின் அன்பும் பாசமும் தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும் வலியும், வேதனையும் முடிவில் கேள்வி கேட்பார் அற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி வண்ண மாலை சாத்தி (இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்க சொல்லி ‘கொடுத்து வைத்தவர்கள்’ – ஓட்டு போடுங்கள் விரும்பும் நபர்களுக்கு.
ஆனால் கூட்டம் போடாதீர்கள் – வாழ்வை தொலைக்க. அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள். என்று மிகவும் வேதனையாக ஒரு பதிவை நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் இப்போது பெரிய அளவில் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
கரூர் சம்பவம் குறித்து நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஜீவி பிரகாஷ்குமார் விஷால் கார்த்தி பிரபுதேவா சரத்குமார் இயக்குனர்கள் அமீர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் தங்களது கவலையை இரங்கலை அஞ்சலியை பதிவிட்டுள்ளனர். இதுதவிர அரசியல் தலைவர்கள் பலரும் நடந்த துயர சம்பவம் குறித்தும் உயிரிழந்தவர்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.





