இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இப்போது கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்துள்ளார். பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் 4ம் தேதி இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில், அடுத்த நாள் 5ம் தேதி பையனூரில் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 4 மாதங்களாக ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரியாமணி மமிதா பைஜூ அபிராமி கெளதம் மேனன் பிரகாஷ் ராஜ் நரேன் பாபி தியோல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் விஜயின் இந்த படத்துக்கு தளபதி 69 என தற்காலிக பெயர் வைத்த நிலையில், நாளைய தீர்ப்பு என டைட்டில் வைக்கப்படுவதாக தகவல் பரவியது. ஆனால் இன்று காலை 11 மணியளவில் கேவிஎன் புரடக்சன்ஸ் தரப்பில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த படத்தின் டைட்டில் ஜனநாயகன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனம் ஒன்றின் மீது நின்றிருக்கும் விஜய்க்கு பின்னால் மக்கள் கூட்டம் காணப்படும் நிலையில், விஜய் தனது போனில் செல்பி எடுப்பது போன்ற அந்த பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. விஜய் பலமுறை இப்படி தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
அதே ஸ்டைலில் உண்மையில் நடந்ததை, சினிமாவிலும் வெளிப்படுத்தும் விதமாக இப்படி ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிறகு, இன்று மாலையே செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது தளபதி ரசிகர்களை பெரிய உற்சாகத்தில் தள்ளியது.
இன்று மாலை 4 மணியளவில், ஜனநாயகன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் சாட்டையை சுழற்றியபடி விஜய் இருக்கும் அந்த போட்டோவில், நான் ஆணையிட்டால்… என்ற வாசகங்களும் காணப்படுகிறது. எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் எம்ஜிஆர் நான் ஆணையிட்டால் என்ற பாடல் காட்சியில் இப்படிதான் நம்பியாரை அடிக்க எம்ஜிஆர் சாட்டையை சுழற்றுவார். அந்த ஸ்டைலில் எம்ஜிஆர் பாணியில் இப்படி சாட்டை சுழற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.





