எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான் நடிகர்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த காலத்தில் அவர்களது சம்பளம் ஆரம்பத்தில் சில ஆயிரங்களாக மட்டுமே இருந்தன. பல படங்களில் நடித்து உச்ச நடிகர்களாக மாறிய பிறகுதான் லட்சங்களுக்கே அவர்களது சம்பளம் மாறியது. ஆனால் இப்போதெல்லாம் நடிகர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர்.
உதாரணமாக ரஜினி கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் சம்பளம் எல்லாம் 150 கோடி ரூபாயை எப்போதோ கடந்து விட்டது. அதிலும் விஜய் ஜனநாயகன் படத்தில் நடிக்க ரூ. 250 கோடி வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜீத்குமார் தனது அடுத்து நடிக்கும் ஏகே 64 படத்துக்கு 186 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. தனுஷ் சூர்யா சிவகார்த்திகேயன் சியான் விக்ரம் சம்பளம் எல்லாம் ரூ. 50 கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறது.
அதே போல் இந்தி தெலுங்கு கன்னடம் மொழி நடிகர்களில் பலரும் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். குறிப்பாக சிரஞ்சீவி பிரபாஸ் ரிஷப் ஷெட்டி சல்மான்கான் என பல நடிகர்கள் பெரிய சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் மலையாள நடிகர்கள் இன்னும் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் எதுவும் இல்லை. ஆனால் மிக விரைவில் மோகன்லால் பிருத்விராஜ் போன்றவர்கள் அந்த அளவுக்கு வர வாய்ப்புள்ளது.
இந்நிலையில் உலக அளவில் பணக்கார நடிகர் என்ற பெருமை பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கிடைத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். கடந்த பல ஆண்டுகளாக அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்த நிலையில் 2023ம் ஆண்டு ஹாட்ரிக் வெற்றி கொடுத்து கம்பேக் கொடுத்தார்.
ஜவான் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் சமீபத்தில் மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றார். தற்போது கிங் என்ற படத்தில் நடித்து வந்த ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக ஷாருக்கான் இப்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் ஒரு பிரபல நிறுவனம் நடத்தி வெளியிட்ட ஆய்வின்படி உலகில் பணக்கார நடிகர் என்ற பெருமையை நடிகர் ஷாருக்கான் பெற்றுள்ளார்.
இந்த ஆய்வின்படி நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 12,490 கோடி ரூபாய். சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு தொழில்களில் ஷாருக்கான் முதலீடு செய்து வருகிறார். அவர் ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. அதேபோல ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் ஷாருக்கான் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





