கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் “அந்நியன்”. இத்திரைப்படத்தில் விக்ரமின் அபாரமான நடிப்பை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. அம்பி, அந்நியன், ரெமோ ஆகிய மூன்று கதாபாத்திரங்களில் பிச்சி உதறியிருப்பார் விக்ரம். அதுவும் பிரகாஷ் ராஜ் விசாரிக்கும் காட்சியில் விக்ரம் மூன்று கதாபாத்திரங்களையும் மாறி மாறி கொண்டு வந்து பேசுவது இன்றும் பிரபலமான காட்சியாகும்.

“அந்நியன்” திரைப்படத்தில் சதா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் சதா கூறிய செய்தி இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது “அந்நியன்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் சதா விக்ரமை அண்ணா என்றும் விக்ரம் சதாவை தங்கச்சி என்றும் அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்களாம்.

இது ஒரு நாள் இயக்குனர் ஷங்கருக்கு தெரிய வர, இருவரையும் அழைத்து, “உங்கள் இருவரையும் ராமர் சீதாவை போல் காட்சி படுத்த முயற்சி செய்து வருகிறேன். ஆனால் நீங்கள் ஒருவருக்கொருவர் அண்ணா, தங்கச்சி என்று கூப்பிட்டுக்கொள்கிறீர்கள். நீங்கள் அண்ணா, தங்கச்சி என்று ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்ளும் விஷயம் மீடியாவுக்கு தெரிந்துவிட்டது என்றால் இந்த படத்தை பார்க்க யாரும் வரமாட்டார்கள்” என்று கத்தினாராம். அதன் பிறகு விக்ரம் சதாவை தங்கச்சி என்று அழைப்பதையும் சதா விக்ரமை அண்ணா என்று அழைப்பதையும் நிறுத்திக்கொண்டார்களாம்.
இது குறித்து அப்பேட்டியில் பேசிய சதா, “ஷங்கர் கூறியதை நாங்கள் நன்றாகவே புரிந்துகொண்டோம். அவர் கூறியது மிகவும் சரியான விஷயம்தான்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





