தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து, மார்க்கெட்டிலும் அதிக வேல்யூ உடன் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருப்பவர் நடிகர் அஜித். அவர் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் போதும், அந்த நாளே திருவிழா கோலம் பூண்டு விடும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அஜித் படத்திற்கென கூட்டம் கூட்டமாக இளைஞர் படையினர் திரள்வார்கள்.
மற்ற ஹீரோக்களின் திரைப்படங்கள் ஒரு வாரத்தில் வசூல் செய்யும் தொகையை அஜித் திரைப்படங்கள் வெறும் மூன்று அல்லது நான்கு நாட்களில் பார்த்து விடும். அந்தப் படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்காது.
இதன் காரணமாகத்தான் அவர் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். இருப்பினும் அஜித்திற்கு என்று சில குணாதிசயங்கள் இருக்கின்றன. தான் மிகப்பெரிய ஸ்டாராக இருந்த போதும், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அதன் எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்.
இதற்காகத்தான் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே, தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார். உச்சத்தில் இருக்கும் எந்த ஒரு நடிகரும் செய்யாத ஒரு செயலை அஜித்குமார் செய்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். இதேபோல் அவரை தல என்று செல்லமாக பலரும் அழைத்து வந்தனர். இதற்கு அஜித் குமாரும் எந்த ஒரு ஆட்சேபமும் சொல்லாமல் இருந்தார்.
ஆனால் திடீரென ஒரு நாள் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் எனவும் அதற்கு பதில் ஏகே வேண்டுமானால் கூப்பிடுங்கள் என்றும் கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் இருந்து அவர் எப்போதுமே விலகி தான் இருப்பார். ஆனால் அவரை ரசிகர்கள் மட்டும் விடவே மாட்டார்கள்.
இப்படிதான் அண்மைக்காலமாக அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கடவுளே அஜித்தே என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். அரசு விழாவானாலும் சரி, கோவில் திருவிழாவானாலும் சரி, ஒரு சுற்றுலா தளம் என்றாலும் சரி அங்கு நிச்சயம் கடவுளே அஜித்தே என்று இளைஞர்கள் கோஷமிட்டு கொண்டே இருந்தனர். இதை சற்றும் விரும்பாத அஜித் அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் இந்த கோஷம் தன்னை கவலை அடைய செய்திருப்பதாக அஜித்குமார் கூறியிருக்கிறார். மக்கள் கூடும் இடங்களில் ஏற்படும் இந்த அசௌகரியத்தை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறி இருக்கிறார். ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அஜித் கேட்டுக் கொண்டுள்ளார்.





