நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜனநாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. முதல் படத்தில் செல்பி, 2வது படத்தில் நான் ஆணையிட்டால் என சவுக்கை சுழற்றியபடி விஜய் அதில் காணப்பட்டார்.
சதுரங்க வேட்டை நேர்கோண்ட பார்வை தீரன் அதிகாரம் 1 துணிவு வலிமை உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் எச் வினோத் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து விட்டது. அதுவும் விஜயின் கடைசி படமாகவும் இது உள்ளது.
விஜய் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடித்த முதல் படம், அவர் அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தின் பெயர்தான் அவரது கடைசி படம் 69வது படத்துக்கும் டைட்டிலாக வைக்கப்படும் என்று முதலில் தகவல் பரவியது. இது ஒரு விதத்தில் எந்த நடிகருக்குமே அமையாத வாய்ப்பாகவும் கருதப்பட்டது. அவரது அரசியல் பயணத்துக்கும் இந்த டைட்டில் நன்றாக பொருந்தியது.
ஆனால் ஏற்கனவே நாளைய தீர்ப்பு பெயர்தான் வைக்கப்படும் என்று தகவல் பரவியதால், படத்தின் டைட்டில் குறித்த சுவாரசியம் குறைந்துவிடும் என்பதற்காகவே இந்த படத்துக்கு ஜனநாயகன் என புதிய டைட்டில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தெலுங்கில் வெளியான பகவந் கேசரி என்ற படத்தில் தமிழ் ரீ மேக்தான் இந்த படம் என்ற தகவலும் பரவி வருகிறது.
ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ அபிராமி பிரியாமணி பாபி தியோல் பிரகாஷ் ராஜ் நரேன் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ளதாகவும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனநாயகன் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது இணைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவர் இப்போது ஜனநாயகன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் ஸ்ருதிஹாசன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரஜினி படத்திலும் தொடர்ந்து விஜய் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





