விடுதலை விடுதலை 2 படங்களை தொடர்ந்து வெற்றிமாறன், சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். தக்லைஃப் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்துவிட்டார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். வருகிற ஆகஸ்ட் 2வது வாரத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
வடசென்னை படத்தின் 2ம் பாகமாக இந்த படம் உருவாகிறது என்று சொல்லப்பட்டாலும் அந்த படத்தின் கிளை கதையாக தான் இது இருக்குமே தவிர, வடசென்னை படத்தின் நேரடியான 2ம் பாகமாக தொடர்ச்சியாக இருக்காது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையே சென்னையில் உள்ள போலீஸ் மியூசியத்தில் வடசென்னை 2 படத்துக்கான பிரமோ ஷூட் 2 நாட்களாக நடத்தப்பட்டது. இதில் நடிகர் சிம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது இயக்குனர் நெல்சனும் இந்த பிரமோ ஷூட்டிங் பங்கேற்று நடித்தார். அவர் இந்த பிரமோவில் இயக்குனர் நெல்சனாகவே நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் படத்தில் நெல்சன் நடிக்கிறாரா இல்லையா என்று இன்னும் முடிவு செய்வதில்லை. ஒருவேளை தேவைப்பட்டால் இந்த படத்தில் நெல்சன் திலீப்குமாரும் நடிக்க வாய்ப்புள்ளதாக வெற்றிமாறன் கூறியிருக்கிறார். அதனால் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், வெற்றிமாறன் படத்தில் நடிகராக அறிமுகமாவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் 2 நாட்கள் பிரமோ ஷூட்டிங் செய்யப்பட்ட நிலையில், அந்த டீசர் வருகிற 25ம் தேதி அமாவாசை தினத்தன்று வெளியாகிறது. அப்போது படத்தின் பெயருடன் அந்த டீசர் வெளியாக உள்ளது. ஒரு சிலர் ராஜன் வகையறா என படத்துக்கு டைட்டில் என்று கூறியிருந்தாலும் அந்த டைட்டிலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
வடசென்னை படத்தில் ராஜன் என்ற முக்கிய கேரக்டரில் அமீர் நடித்ததால் அதன் தொடர்ச்சியாக இருந்தால்தான் ராஜன் வகையறா என டைட்டில் இருக்கும். கிளைக்கதையாக இந்த படம் உருவாவதால் நிச்சயம் வேறு டைட்டிலாக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வருகிற 25ம் தேதி வெளியாகும் டீசரில் எஸ்டிஆரின் 49வது படத்தின் டைட்டில் இதுதான் என்று அதிகாரபூர்வமாக வெற்றிமாறன் அறிவிக்க உள்ளார்.





