நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் கடந்த மாதம் 6ம் தேதி வெளியானது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறாமல் பிளாப் ஆனது. ரூ. 200 கோடி வரை தயாரிப்பு நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி நடிகர் அஜீத்குமார் 3 கேரக்டர்களில் நடித்த குட்பேட் அக்லி படம் ரிலீஸாகிறது. இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் சுனில் பிரசன்னா பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் அர்ஜூன் தாஸ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. தமிழில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பை அடுத்து, குட்பேட் அக்லி படம் இந்தி வெர்ஷனிலும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது.
இப்போது நடிகர் அஜீத்குமார் பிரிட்டனில் நடந்து வரும் கார் பந்தயத்தில் கலந்துக்கொண்டு இருக்கிறார். விடாமுயற்சி படம் பலத்த ஏமாற்றம் தந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு அவரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த படம் மாஸ் ஹிட் ஆக அமைந்தால், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க அஜீத்குமார் முடிவெடுப்பார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பதால் குட் பேட் அக்லி படத்தில் வேற லெவலில் தனது அபிமான கதாநாயகன் அஜீத்குமாரை வைத்து அவர் தரமான சம்பவம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இம்மாத இறுதியில் குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்யவும் ஏற்பாடு நடந்து வருகிறது.
இப்போது குட் பேட் அக்லி படத்தில் இருந்து மற்றொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை சிம்ரன் கேமியோ ரோலில் வருகிறார். ஏற்கனவே வாலி அவள் வருவாளா உன்னைக்கொடு என்னை தருவேன் படங்களில் அஜீத்குமாருடன் சிம்ரன் நடித்திருந்தார். இப்போது 4வது முறையாக இந்த படத்திலும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அத்துடன் நடிகர் சிம்புவும் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





