நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மிக பிரம்மாண்டமான உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் முக்கிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, கங்குவா படம் ரூ. 2000 கோடி வரை வசூலிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த வணங்கான் படமும், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு படமும் கைவிடப்பட்ட நிலையில், முக்கிய இயக்குனர்களின் படங்களை வாய்ப்பை சூர்யா தவற விட்டு விட்டார் என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிருப்தி நிலவியது.
அந்த சூழ்நிலையில், இப்போது சூர்யா நடிப்பில் கங்குவா படம் வெளியாகிறது. இந்த படம் தற்போது 1ம் பாகமாகவும், இதை தொடர்ந்து அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 2ம் பாகமாகவும் வெளிவர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் இம்மாதம் 10ம் தேதியே வெளிவர இருந்த நிலையில், ரஜினி நடித்த வேட்டையன் படம் அந்த தேதியில் வெளியானதால், கங்குவா ரிலீஸ் நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
நடிகர் சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்தார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் 3 நாட்கள் மட்டுமே சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. அதில் காசியில் ஒருநாள் படப்பிடிப்பும், அம்பத்தூர் பாக்டரியில் 3 நாட்கள் படப்பிடிப்பும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நடிகர் சூர்யா நடிகர் மற்றும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் நாயகியாக கஷ்மீரா பர்தேசி நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இவர் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தில் ஜிவி பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நடித்தவர், ஹிப் ஆப் ஆதி நடித்த அன்பறிவ் மற்றும் பிடி சார் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதற்கிடையே ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சூர்யா 44 படத்தின் கதையை, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜா நடிகர் விஜயிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த கதையில் நான் நடித்தால் சரியாக வராது என்று அவர் கூறியதால் அந்த கதையை தான் சூர்யாவிடம் கூறி, சூர்யா 44 படம் உருவானது. அதேபோல் ஆர் கே பாலாஜி நடிகர் விஜயிடம் கூறிய அதே கதையில் சூர்யா இப்போது சூர்யா 45 படத்தில் நடிக்கிறார். கார்த்திக் சுப்பராஜ், ஆர்ஜே பாலாஜி என இருவருமே நடிகர் விஜயிடம் ஏற்கனவே சொல்லி, அவர் நடிக்க மறுத்த கதைகள்தான் இவை என்ற லேட்டஸ்ட் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.





