தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் பிரிவு என்பது நீண்ட காலமாக தொடர் கதையாக தான் இருக்கிறது ஆரம்பத்தில் பார்த்திபன் – சீதா, நளினி – ராமராஜன், தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ் குமார் – சைந்தவி, என்ற வரிசையில் இப்போது ஆர்த்தி – ஜெயம் ரவி தம்பதியும் இணைந்து விட்டனர்.
திடீரென தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி, குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து விட்டார். தற்போது தனது மனைவி ஆர்த்தியின் வீட்டில் உள்ள தனது பொருட்களை மீட்டுத் தருமாறு போலீசாரிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவரும் நெருக்கமாக பழகுவதாகவும், இதனால்தான் மனைவி ஆர்த்தியை பிரிய ஜெயம் ரவி முடிவு செய்துவிட்டார் என்றும் வலைதளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. வளர்ந்த பிள்ளைகள் உள்ள நிலையில், காதல் திருமணம் செய்த ஜெயம் ரவி, மனைவியை பிரிய முடிவு செய்தது திரைத்துறையினர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் கெனிஷா பிரான்சிஸ் பற்றிய புகார் குறித்து நடிகர் ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். அவரும் நானும் நல்ல நண்பர்கள். அவர் ஒரு உளவியலாளர். 600க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியவர். எதிர்காலத்தில் நானும் அவரும் சேர்ந்து ஹீலர் சென்டர் நோய் சிகிச்சை மையம் அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதைக் கெடுத்து விடாதீர்கள் என்று ஜெயம் ரவி கூறியிருந்தார்.
மேலும் இந்த பிரச்சனை குறித்து ஒரு நேர்காணலில் பேசிய கெனிஷா, ஜெயம் ரவிக்கும் எனக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில் முறை சார்ந்தது மட்டும்தான். ஜெயம் ரவி என்னுடைய நண்பர், எனது வாடிக்கையாளர் அவ்வளவுதான். அவர்கள் விவாகரத்துக்கு நான் காரணம் என சொல்கிறார்கள் அது முற்றிலும் பொய். ஜெயம் ரவி அவரது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரை அவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.
இது உங்கள் வீட்டு பிரச்சனை இல்லை. வேறொருவரின் குடும்ப பிரச்சனை அதிலிருந்து விலகி இருங்கள். என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள். எனக்கு வேறு வேலை இருக்கிறது. இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று கூறி இருக்கிறார். ஆனால் ஜெயம் ரவி மனைவி விவாகரத்து செய்வதற்கு முன்பே பல மாதங்களாக அவர்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடும் விரிசலும் ஏற்பட்டு வந்த நிலையில், அதற்கு பாடகி கெனிஷா தான் காரணம் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




