தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பி சுசீலா பல ஆயிரம் பாடல்களை பாடியவர். எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் நாயகிகளுக்கு பின்னணி பாடியவர் பி சுசீலா. 1970 முதல் 2010 வரை பல ஆயிரம் தமிழ் படங்களை பாடிய பி சுசீலா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பெரிய அளவில் ரசிகர்களிடம் புகழ் பெற்றவர்.
ஜெயலலிதா, சரோஜா தேவி, கே ஆர் விஜயா, பத்மினி, பானுமதி, சாவித்திரி என கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் வெளியான படங்களில், அவர்களது பின்னணி குரலாக பாடல்களில் ஒலித்தது 90 சதவீதம் பி சுசீலா குரல்தான். எப்போதுமே அவரது பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு இருக்கிறது.
குறிப்பாக பார்த்த ஞாபகம் இல்லையோ, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனோ என பல பாடல்கள் இன்றளவும் டிரண்டிங் ஆக ரசிகர்களால் வரவேற்கப்படுகின்றன. டிஎம் சௌந்தர்ராஜன் பி சுசீலா இருவரும் சேர்ந்து தமிழ் படங்களில் பாடிய பல ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றென்றும் ரசிக்கத்தக்கவை.
பி சுசீலா, கடந்த 10, 15 ஆண்டுகளாக திரைப்படங்களில் பாடுவதில்லை. அவருக்கு இப்போது 88 வயதான நிலையில், சென்னையில் ஓய்வில் இருந்து வருகிறார். முன்பெல்லாம் எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா போன்றவர்கள் நடத்தும் இசைக் கச்சேரிகளில் எல்லாம் பி சுசீலா பங்கேற்று பாடியிருக்கிறார். பி சுசீலா பாடிய பக்தி பாடல்கள் பெரிய அளவில் ரீச் ஆனவை.
இந்நிலையில் திடீரென பாடகி பி சுசீலா திடீரென உடல் நலம் பாதித்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 88 வயதான நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பது ரசிகர்களை பதைக்க பதைக்க செய்துள்ளது.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், வயது முதிர்வு காரணமாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் பாடகி பி சுசீலா விரைவில் உடல் நலம் பரிபூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.





