தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவரது இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த வீரம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் வெளியாகி பெரிய அளவில் மாஸ் ஹிட் படங்களாக அமைந்திருக்கின்றன. மேலும் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை முதல் படமாக இயக்கியதால், இவர் சிறுத்தை சிவா என்றே அழைக்கப்படுகிறார்.
சிவாவின் இயக்கத்தில் வெளியான முதல் படம் சிறுத்தை மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தை டைரக்ட் செய்ததும் நடிகர் இயக்குனர் சிறுத்தை சிவா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வசூல் ரீதியாக திருப்தியளித்த இந்த படம், விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை ரஜினிக்கு பெற்றுத் தரவில்லை.
இப்போது சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த மாதம் 10ம் தேதியே கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ரிலீஸ் 10ம் தேதி என முடிவானதால் அதன் காரணமாக கங்குவா படம் ரிலீஸ் நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை ஸ்டுடியோ ஸ்கீரன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள கங்குவா படம், அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கங்குவா படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் 10 மொழிகளிலும் நடிகர் சூர்யா டப்பில் பேசியிருக்கிறார். கங்குவா இசை வெளியீட்டு விழா, வரும் 26ம் தேதி நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
மேலும், படக்குழு பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறது. அந்த வகையில் கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது, விஜய் படத்தை இயக்குவது குறித்து சிறுத்தை சிவாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிறுத்தை சிவா, நான் பலமுறை நடிகர் விஜயை சந்தித்து பேசி இருக்கிறேன். படம் எடுக்க அவரிடம் கதையை கூறி இருக்கிறேன். படம் தொடர்பாக எங்களுக்குள் நிறைய சந்திப்புகள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் கூட அவரை சந்தித்தேன். ஆனால் சரியான காலம் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்று, சிறுத்தை சிவா கூறியிருக்கிறார். அது இப்போது வைரலாகி வருகிறது.





