ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜவான். கடந்த ஏழாம் தேதி ரிலீஸான படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி முடிவில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் படத்தை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர் ரசிகர்கள்.
ஜவானில் மொத்தம் 23 படங்களை காப்பி அடித்திருக்கிறார் அட்லீ. மனசாட்சியே இல்லாமல் தன்னுடைய படத்திலிருந்தே காட்சிகளை காப்பி அடித்து ஜவானில் யூஸ் செய்திருக்கிறார். இந்தக் கதை எல்லாம் பாலிவுட்டுக்கு புதிதாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டுக்கு அரத பழசான கதை என்று வைத்து செய்துவருகின்றனர். மேலும் அட்லீ எப்போதுதான் திருந்துவாரோ என்றும் அவர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு அட்லீ குறித்தும் ஜவான் படம் குறித்தும் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “ஏதோ ஒரு விஷயத்தை ஜவான் அழுத்தமாக சொல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படம் ஏமாற்றிவிட்டது. நான் படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது எனது அருகில் இருந்தவர் ஒவ்வொரு சீனையும் பார்த்து இது அந்த படத்தில் வந்த சீனாச்சே என்று கமெண்ட் செய்துகொண்டிருந்தார்.
இந்தப் படம் ஆரம்பிக்கப்படும்போது விவசாய கடன் பிரச்னை, இந்தியாவில் இருக்கும் அரசு மருத்துவமனைகளின் அவலம், போபால் விஷ வாயு பிரச்னை, ஊழ போன்றவைகளை கையில் எடுத்தார் அட்லீ. ஆனால் அதை எதை பற்றியும் தெளிவாக சொல்லாமல் திரைக்கதையில் பெரிய கோட்டையை விட்டிருக்கிறார். மத்திய அரசுக்கு எதிராக பேச அட்லீக்கும், ஷாருக்கானுக்கும் பயமா என்றும் தெரியவில்லை.
படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரொம்பவே முக்கியமானது. அந்தக் கதாபாத்திரத்தை அழுத்தமாக காண்பிக்காமல் பூசி மெழுகிவிட்டார். இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர். அவரை அட்லீ வீணடித்துவிட்டார். அவர் மட்டுமில்லை நயன்தாரா, சஞ்சய் தத், ப்ரியாமணி போன்றோரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜவான் கதையை முதலில் விஜய்யிடம்தான் அட்லீ சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட விஜய் இது வேண்டவே வேண்டாம் என்று பின்வாங்கி இருக்கிறார். அதன் பிறகுதான் ஷாருக்கானுக்கு இந்தக் கதை போயிருக்கிறது. நல்ல வேளையாக இந்தப் படத்தில் விஜய் நடிக்கவில்லை. ஷாருக்கான் போன்ற பெரிய ஸ்டாருக்கு பாதி படத்திலேயே படம் எப்படி இருக்கும் என்று கணித்துவிடுவார்கள். ஆனால் ஷாருக் எப்படி கணிக்காமல் விட்டார் என்று தெரியவில்லை” என கூறினார்.





