ஆரம்பத்தில் விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி ஷோவில் தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவரது நகைச்சுவை உணர்வு பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. பிறகு திரைப்பட விருது விழாக்கள் மற்றும் நடிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் அவர் நேர்காணல் செய்தார்.
தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக இப்போது வளர்ந்து நிற்கிறார். அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆனது.
அமரன் படத்தில் அபார வெற்றிக்கு பிறகு பராசக்தி படத்தை தொடர்ந்து இப்போது சேயோன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் சொந்தமாக தயாரிக்கிறார். அமரன் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தையும் கமலே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மேம்படுத்தி வருகிறார். சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் மூலமாக ரத்ததானம் கல்வி உதவித்தொகை வழங்குதல் ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தனது ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து வரும் சிவகார்த்திகேயன் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நற்பணி இயக்க நிர்வாகிகளையும் சந்திக்க முடிவு செய்தார். அதன்படி சென்னை முகலிவாக்கத்தில் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழா மேடை உள்ளிட்ட விஷயங்கள் அரசியல் மாநாடு போல பிரமாண்டமாக காட்சியளித்தது. கிட்டத்தட்ட 2000 நிர்வாகிகள் வெள்ளை சட்டை அணிந்து தொண்டர்கள் போல் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை ஒரு அரசியல் கட்சி மாநாடு போல் மிகச் சிறப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் சிவகார்த்திகேயனும் அரசியல் களத்தில் இறங்கலாம் என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.





