கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. படத்தின் முதல் பாதியை விரிவாகவும் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அதிலும் கிளைமாக்ஸில் கடைசி பத்து நிமிடங்கள் சூர்யா வந்த காட்சிகள் அரங்கை அதிர வைத்தன. ரோலக்ஸ் எனும் கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜின் எல்சியூ கான்செப்ட் தான். தனது முந்தைய திரைப்படமான கைதியின் கதாபாத்திரங்களை இதில் இணைத்து, சுவாரசியமாக கதையை கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.
இதனைத் தொடர்ந்து அவரது எல் சி யு கான்செப்ட் வளர ஆரம்பித்தது. லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்திலும் இதே கான்செப்ட் கொண்டுவரப்பட்டது. ஆனால் அது ரசிகர்களுக்கு அந்த அளவு பிடித்தமானதாக அமையவில்லை. வழிந்து திணிக்கப்பட்டது போலவே அது இருந்ததாக பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில் தற்போது, தனது தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் திரைப்படம் எல் சி யூ கான்செப்ட் தான் என்று அறிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவரது ஜீ ஸ்குவாட் நிறுவனம் இதனை தயாரிக்க, பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ மற்றும் கார்த்தியை வைத்து சுல்தான் ஆகிய திரைப்படங்களை எடுத்திருந்தார்.
பென்ஸ் திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். இதுபோக மாதவன் மற்றும் நிவின் பாலி ஆகியோரும் படத்தில் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் இந்த திரைப்படத்திற்கான பூஜைகள் நடைபெற்றன. அதில் லோகேஷ் கனகராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தற்போது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், நேரடியாக அந்த தளத்திற்கு சென்று இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் ராகவா லாரன்ஸ் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன. இதைப் பார்த்த பலரும் ஒருவேளை சிவகார்த்திகேயனும் எல்சியு கான்செப்டில் வருகிறாரா, அதற்கான ஒத்திகைதானா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.





