நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அயலான். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய இந்த அயலான் படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பின்றி இந்த படம் ஏமாற்றத்தை அளித்தது. ஏலியன் படம் என்ற போதிலும் எதிர்பார்த்த சுவாரசியம் படத்தில் இல்லை.
இந்த படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த அமரன் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் வௌியான நிலையில், படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தை சொல்வதாக, இஸ்லாமிய அமைப்புகள் கமல், சிவகார்த்திகேயனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் பிளாப் ஆகி தோல்வியை தந்துள்ளன. அதில் டான், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, சீமராஜா போன்ற படங்களை சொல்லலாம். டாக்டர் படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், மாவீரன் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. அயலான் படம் மொத்தமாக ரசிகர்களை ஏமாற்றி விட்டது.
இப்போது எஸ்கே 23 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்த படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என்ற நிலையில், 30 கோடி ரூபாய் சம்பளமாக சிவகார்த்திகேயன், ரூ. 20 கோடி சம்பளமாக ஏஆர் முருகதாஸ், ரூ. 7 கோடி சம்பளமாக அனிரூத் பகிர்ந்த நிலையில், மீதி 13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்பட உள்ளது.
எஸ்கே 23 என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு, இப்போது வேலூரில் நடந்து வருகிறது. விஐடி கல்லூரியில் நாயகன் சிவகார்த்திகேயன், படத்தின் நாயகி ருக்மணி வசந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் கல்லூரி மாணவர் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தெரிய வந்துள்ளது.
கல்லூரியில் படப்பிடிப்பு என்பதால், சிவகார்த்திகேயனுடன் செல்பி எடுக்க மாணவர்கள் திரண்டு விட்டனர். அத்தனை பேருடனும் தனித்தனியாக செல்பி எடுக்க முடியாது என்பதால், மொத்தமாக அவர்களை நிற்க வைத்து சிவகார்த்திகேயன் ஒரே செல்பி எடுத்திருக்கிறார்.இந்த செல்பி தளபதி விஜய் ஸ்டைலில் ரசிகர்களுடன் இருப்பது போல வந்திருப்பதால், ரசிகர்களுடன் செல்பி விஷயத்திலும் அடுத்த தளபதி இவர்தான் என, சோஷியல் மீடியாவில் கமெண்ட் வைரலாகி வருகிறது.





