- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னங்க இது... ஜெய்பீம், கர்ணனுக்கு தேசிய விருது இல்லையா... தமிழ் ரசிகர்கள் ஆதங்கம்... விமர்சனத்திற்கு உள்ளாகும்...

என்னங்க இது… ஜெய்பீம், கர்ணனுக்கு தேசிய விருது இல்லையா… தமிழ் ரசிகர்கள் ஆதங்கம்… விமர்சனத்திற்கு உள்ளாகும் விருது பட்டியல்…

- Advertisement -

2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் திரைப்படங்கள் அல்லாத பிரிவில், சிறந்த கல்வி படமாக இயக்குனர் லெனினின் சிற்பிகளின் சிற்பமும் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது. குறும்பட பிரிவில் கருவறை படத்திற்கான இசை பிரிவில் ஸ்ரீ காந்த் தேவாவுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

இதன்பிறகு திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகர் விருது, புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டது. படம் முழுவதும் தோள்பட்டையை ஒரு பக்கமாக சாய்த்து கொண்டு, தாடியை கைகளால் நீவி, வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்தியிருந்த அல்லு அர்ஜுன், முதல் முறையாக தேசிய விருதை தட்டி சென்றதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

- Advertisement -

சிறந்த நடிகையாக கங்குபாய் கத்தியவாடியில் நடித்த ஆலியா பட் அறிவிக்கப்பட்டார். படம் வெளியானபோதே கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு, தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் என்ற பிரிவில் விருது அறிவிக்கப்பட்டது.

தமிழில் 2021 ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் ஆகிய திரைப்படங்களுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என ரசிகர்கள் நம்பியிருந்தனர். இந்த படத்தின் காட்சிகளை காலை முதலே இணையத்தில் பதிவிட்ட ரசிகர்கள், எந்தெந்த பிரிவுகளில் விருதுகள் கிடைக்கும் என்பதை யூகித்து, பட்டியலாக வெளியிட்டனர்.

- Advertisement -

குறிப்பாக சாதிய அவலத்தை கண் முன்னே நிறுத்தி, காவலர்களின் அத்துமீறலை அப்படியே மக்களுக்கு கொண்டு சேர்த்த ஜெய்பீம் படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், செங்கேணியாக வாழ்ந்த லிஜோமல் தாமஸிற்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைக்கும் என ரசிகர்கள் கூறிவந்தனர்.

இதேபோல், கர்ணன் படத்தில் நடித்த தனுஷிற்கு மூன்றாவது முறையாக தேசிய விருது கிடைக்கும் என நம்பிய அவரது ரசிகர்கள், அந்த படத்தின் காட்சிகளை எடிட் செய்து ட்ரெண்ட் பண்ணினர். இப்படி இருக்க ரசிகர்கள் எதிர்பார்த்த எந்த படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்படாதது பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. சிறந்த படத்திற்கான விருது மாதவனின் ராக்கெட்ரிக்கு வழங்கப்பட்டதால் சிலர் நொந்து போயினர். அதே சமயம், சிறந்த தமிழ் படத்திற்கான விருது கடைசி விவசாயிக்கும், அந்த படத்தில் வாழ்ந்த மறைந்த நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டது, ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்