தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், தயாரிப்பு உட்பட பல்வேறு துறைகளில் ஜாம்பவானாக விளங்குபவர் தனுஷ். ஆரம்ப காலத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்து, தனது முழு நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தினார் தனுஷ். அங்கிருந்து, முன்னேறிக்கொண்டே சென்றவர் இன்று சிகரத்தின் உச்சியில் இருக்கிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல் தனது ஒண்டர் பார் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பு பணிகளையும் அவர் மேற்கொண்டார். இது போக மூணு திரைப்படத்திலிருந்து, அவர் பாடலாசிரியராகவும் விளங்கி வருகிறார். அனைத்திற்கும் மகுடம் சூட்டுவது போல, பா பாண்டி திரைப்படத்தின் அவர் இயக்கியிருந்தார்.
ராஜ்கிரன் மற்றும் ரேவதியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. சிறுவயதில் தொலைந்து போன காதலை, வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் முதியோர்கள் அதனை தேடினால் எப்படி இருக்கும் என்ற ஒன்லைன் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை அவர் எடுத்தார்.
தனுஷ் எதிர்பார்த்தது போலவே இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது. இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் தனது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதற்கு ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இது திரைப்படத்திற்காக மொட்டை கெட்டப்பில் தனுஷ் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் தனுசுடன் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் தனுஷிற்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தத் திரைப்படம் குறித்து பேசி இருக்கும் எஸ் ஜே சூர்யா, ஒரு திறம்பட நடிகர் இயக்குனராக இருக்கும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் அமையும் என்பதை இந்த திரைப்படத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டேன். எல்லாரிடமும் தனுஷ் செல்வார். இந்த திரைப்படத்தில் எல்லோருக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். அவர்கள் பின்னணியில் கதை செல்லும். முக்கியமாக துஷாரா விஜயனுக்கு மிகப்பெரிய கதாபாத்திரத்தை தனுஷ் கொடுத்திருக்கிறார். சொல்லப்போனால் அவரது பெயர்தான் முதலில் வரும். பிறகு தனுஷ் பெயர் அடுத்தது எனது பெயர் படத்தில் இருக்கும் என்று கூறி இருக்கிறார். ராயன் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





