தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் அஜீத்குமார் சிம்ரன் நடித்த வாலி படம்தான் எஸ்ஜே சூர்யா இயக்கிய முதல் படம். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் அண்ணன் தம்பியாகவும். அதில் அண்ணன் அஜீத்குமார் வில்லன் கேரக்டரிலும் நடித்திருந்தார்.
வாலி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கினார். இந்தப் படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து இயக்குனராக இருந்த எஸ்ஜே சூர்யா நியூ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் மாறினார். தொடர்ந்து கள்வனின் காதலி அ ஆ போன்ற படங்களில் கதாநாயகனாக எஸ் ஜே சூர்யா நடித்தார்.
சினிமாவில் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதன் பிறகு 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகர் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா, மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இறைவி படத்தை தொடர்ந்து ஸ்பைடர் மெர்சல் மாநாடு மான்ஸ்டர் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் மார்க் ஆண்டனி ராயன் இந்தியன் 2 கேம் சேஞ்சர் வீரதீர சூரன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பெரும்பாலான படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து எஸ் ஜே சூர்யா ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் எஸ்ஜே சூர்யா இயக்குனராக களத்தில் இறங்கி இருக்கிறார். அவரது இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடிக்கும் படத்தின் பெயர் கில்லர். இந்த படத்தில் அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கடந்த வாரம் எஸ்ஜே சூர்யா வெளியிட்ட நிலையில், இப்போது கில்லர் படத்தின் துவக்கவிழா பூஜை நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் எஸ்ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, கில்லர் படத்தின் மூலம் இயக்குனர் பயணத்தை தொடங்க இருக்கும் எனக்கு அபரிவிதமான அன்பை கொடுத்த எனது சினிமா நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் எனது நன்றிகள். அன்பை பொழிந்து ஆதரவளித்து இருக்கிறீர்கள். இந்த அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ? கில்லர் படம் தொடர்பான அபடேட்ஸ் விரைவில் வரும். தொடர்ந்து அதற்காக இணைந்திருங்கள் என்று அந்த பதிவில் எஸ் ஜே சூர்யா கூறியிருக்கிறார்.





