எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் டாப் வில்லனாக வலம் வருகிறார். ஒரு நடிகராக வேண்டும் என்ற விருப்பத்தோடுதான் சினிமாவுக்குள் நுழைந்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் காலம் அவரை ஒரு வெற்றி இயக்குனராக ஆக்கியது. தொடக்கத்தில் பாரதிராஜா, வசந்த் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஜே.சூர்யா, “வாலி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார்.

தனது முதல் திரைப்படத்தின் மூலமே வெற்றி இயக்குனராக தமிழ் சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அதன் பின் விஜய்யை வைத்து “குஷி” திரைப்படத்தை இயக்கி, அந்த படத்தையும் மாபெரும் வெற்றி படமாக ஆக்கினார். அதன் பின் “நியூ”, ‘அன்பே ஆருயிரே” போன்ற திரைப்படங்களை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார்.
அதன் பின் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, “மெர்சல்’, “மாநாடு” ஆகிய திரைப்படங்களின் மூலம் டெரரான வில்லன் நடிகராக உருவானார். தற்போது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த “பொம்மை” திரைப்படம் வருகிற 16 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. எஸ்.ஜே.சூர்யா ஒரு பொம்மையை காதலிப்பது போல் இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
“பொம்மை” திரைப்படத்தை ராதா மோகன் இயக்கியுள்ளார். இவர் “மொழி”, “அபியும் நானும்”, “பயணம்” போன்ற வெற்றித்திரைப்படங்களை கொடுத்தவர். இந்த நிலையில் “பொம்மை” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பிரியா பவானி ஷங்கர், “எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை அருகில் இருந்து பார்ப்பதே ஒரு பெரிய அனுபவம். முதல் டேக்கிலேயே இயக்குனர் ஓகே என்று சொன்னாலும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருப்தியே இருக்காது. 30 டேக்குகளுக்கு மேல் அவரே நடித்து காட்டுவார். ஒவ்வொரு முறை அவர் நடிக்கும்போது பல வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதையே அவர் கொடுப்பார்.

ஒரு ஷோ ரூமில்தான் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அந்த ஷோ ரூமில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரைதான் படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுப்பார்கள். ஷூட்டிங் சீக்கிரம் முடிஞ்சிடும் மூன்று மணிக்காவது கிளம்பிவிடலாம் என்று நினைப்பேன். ஆனால் எஸ்.ஜே.சூர்யாவின் முகத்தில் அப்போதுதான் 31 ஆவது டேக்கில் 31 ஆவது வெரைட்டி வந்துகொண்டிருக்கும்” என கூறியிருந்தார்.





