நடிகர் சூரி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் தன் பயணத்தை துவங்கியவர். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் சவால் காமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிப்பில் வெளுத்து வாங்கி, முன்னணி காமெடி நடிகராக பெயர் பெற்றார். பல முன்ணனி ஹீரோக்களுக்கு காமெடி ரோலில் சூரி, இணையாக நடித்தார்.
குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினிமுருகன், நம்ம வீட்டுப்பிள்ளை, டாண், பிரின்ஸ், மனம் கொத்திப் பறவை போன்ற படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார். அதே போல் குட்டிப்புலி, கொம்பு வைத்த சிங்கம், உடன்பிறப்பு, சுந்தரபாண்டியன் போன்ற சசிக்குமார் நடித்த படங்களிலும் காமெடி ரோலில் நடித்தார்.
இதுதவிர விஷால், கார்த்தி, விஷ்ணு விஷால், விமல், அதர்வா, ஜெயம் ரவி என முன்னணி நாயகர்களுடன் நடித்த வகையில் சூரி, மிக பிரபலமான ஒரு நகைச்சுவை நாயகனாக மாறினார். இதற்கிடையே காமெடி ரோலில் ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டு இருந்த சூரியை திடீரென இயக்குநர் வெற்றிமாறன், விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார்.
ஹீரோ சூரியா என யாரும் ஆச்சரியப்படாமல், விடுதலை படம் பார்க்க ஆர்வமாக ரசிகர்கள் செல்ல ஒரே காரணம், படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் என்பதுதான். கல்லை கனியாக்கும் வித்தை தெரிந்த ஒரு படைப்பாளி, பாரதிராஜாவின் வழிவந்தவர் என்பதால் அந்த நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்தது. அதே போல், விடுதலை படத்தில் குமரேசன் கேரக்டரில் சூரி, போலீஸ் கான்ஸ்டபிளாக வாழ்ந்திருந்தார்.
இப்போது கருடன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து கொட்டுக்காளி உள்ளிட்ட 5 படங்களை கைவசம் வைத்திருக்கிறார். கருடன் படம் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகளும் முடிந்து விட்டது. இனி படத்தை ரிலீஸ் செய்ய மார்ச் 29ம் தேதியை படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஏனெனில் புனித வெள்ளி வரும் மார்ச் 29ல், தொடர் விடுமுறை என்பதால் கருடன் படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால், அந்த வாரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துவங்குவதால், மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதில் மற்றொரு முக்கிய தகவலாக, கருடன் படத்தில் நடிக்க சூரிக்கு வழங்கப்பட்ட சம்பளம், ரூ. 8 கோடி. அதே வேளையில் இயக்குநர் மற்றும் நடிகர் சசிக்குமார் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 2 கோடி. இப்போது சசிக்குமாரை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார் ஹீரோ நடிகர் சூரி. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல படங்களில் சசிக்குமாருடன் காமெடி ரோலில் நடித்தவர்தான் சூரி என்பது கவனிக்கத்தக்கது.





