நகைச்சுவை நடிகரிலிருந்து முழு நேர நடிகராக மாறி இருப்பவர் சூரி. தொடர்ந்து ஒரே மாதிரியான நகைச்சுவை, ஆங்கிலத்தை தவறாக உச்சரித்து அதன் மூலம் காமெடி, எந்த ஒரு சுவாரசியமும் இல்லாத காட்சிகள் என சூரி படத்தில் சுவாரசியமே இல்லாமல் இருப்பதால் அவர் இனி தேற மாட்டார் என்று பலரும் கூறிக் கொண்டிருந்த வேளையில்தான், தன்னை ஒரு சிறந்த நடிகர் என்பதை விடுதலை திரைப்படத்தின் மூலம் அவர் நிரூபித்தார்.
இதற்குப் பின்னணியில் இருந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை போன்ற மிகப்பெரிய திரைப்படத்தில் அழுத்தமான காட்சிகளை சுருக்கி அவர் கொடுத்திருந்தார். குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் சாதாரண காவலராக நடித்திருந்த சூரி, பலராலும் பாராட்டைப் பெற்றார்.
படம் தொடங்கியது முதல், இறுதிக்காட்சி வரை எந்த ஒரு சலனமும் இல்லாமல் காட்சிக்கு காட்சி தன்னை ஒரு சிறந்த நடிகர் என்பதை அவர் நிரூபித்தார். இந்த திரைப்படம் வெளியான புதிதில், சூரியா இவ்வளவு பிரமாதமாக நடித்திருப்பது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் விடுதலை திரைப்படம் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் கொடுக்க ஆரம்பித்தது.
தற்போது அவர் பி எஸ் வினோத் இயக்கத்தில் கொட்டு காளி படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சூரிக்கு வில்லன் கதாபாத்திரமாம். படம் முழுக்க அவர், தொண்டையில் காயம் பட்டவர் போல் நடிக்க வேண்டுமாம். அதற்காக, தன்னை கடினமாக வருத்திக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்திருக்கிறாராம். இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார்.
இதுபோக வெற்றிமாறனின் தயாரிப்பிலும் கருடன் படத்தில் சூரி நடித்து முடித்துள்ளார். இதில் சூரியைத் தவிர சசிகுமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். துரை செந்தில்குமார் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவே பலரது மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதில் நாயை விட விசுவாசம் ஆனவன் சொக்கன் என்று உன்னி முகுந்தன் கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த ஒரு காட்சியிலேயே சூரிக்கு படத்தில் மிக அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. கருடன் என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், மே மாதமே ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வரும் தான் என நினைத்திருந்தோம் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.





