தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர்கள் சந்தானம் மற்றும் சூரி. இதில் சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரீட்சையமானார். அங்கிருந்து வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்து சந்தானம் நகைச்சுவையில் பட்டையை கிளப்ப ஆரம்பித்தார்.
மூத்த நடிகர்கள் ரஜினி விஜய் அஜித் சூர்யா என பல நடிகர்களுடன் கைகோர்த்த சந்தானம், நகைச்சுவையில் தனக்கென பாதையை உருவாக்கி சபாஷ் போட வைத்தார். இந்த நிலையில், காமெடி பிம்பத்தை உடைத்துக் கொண்டு ஹீரோவாக வலம் வர ஆரம்பித்த அவர் அதற்கான முதல் திரைப்படமாக, வல்லவனுக்கும் புல்லும் ஆயுதத்தை தேர்ந்தெடுத்தார்.
தொடர்ந்து தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு பார்ட் 2 உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றியை தேடி கொடுத்தன. ஆனால் இது நீடிக்க வில்லை. தொடர்ந்து சந்தானம் நடித்த திரைப்படங்கள் பலவும் தோல்வியில் சந்திக்க ஆரம்பித்தன. இனி அவர் அவ்வளவுதான் என்று பலரும் கூறி இருந்த வேலையில், அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது டிடி ரிட்டன்ஸ் திரைப்படம்.
இதேபோல் காமெடி நடிகராக இருந்து பிறகு ஹீரோவாக வலம் வருபவர் தான் சூரி. வெள்ளி திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் திருப்புமுனையை கொடுத்தது. அதில் பரோட்டா காட்சியில் நடித்து நகைச்சுவைக்கான தனி பாதையை உருவாக்கிக் கொண்டார்.
நடுவே அவரது காமெடி குறித்து விமர்சனங்கள் என ஆரம்பித்தன. அந்த அளவுக்கு அவரது நகைச்சுவை எடுபடவில்லை என்று பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில்தான், விடுதலை திரைப்படத்தின் மூலம் சூரியை கதாநாயகனாக மாற்றினார் வெற்றிமாறன். அதில் குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்த அவர், தொடர்ந்து கருடன் கொட்டுக்காளி படங்களில் நடித்து கவனத்தைப் பெற்றார்.
தற்போது மாமன் என்னும் திரைப்படத்தில் சூரி நடித்திருக்கிறார். விலங்கு வெப் சீரிஸை எடுத்தவர் இதனை இயக்கி இருக்கும் சூழலில், அதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி வருகிறார். இந்த திரைப்படம் மே 16ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சந்தானத்தின் அடுத்த திரைப்படமான டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் 16ஆம் தேதி தான் குறி வைத்து இருக்கிறது. இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாவது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.





