வழக்கமாக ஒரு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடையும் பட்சத்தில் பல நாட்கள் ஓடி அபார வசூலை குவிக்கும் நிலையில் அந்த படம் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து ரி ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அப்படிதான் பாட்ஷா குணா கில்லி பில்லா புதுப்பேட்டை போன்ற பல படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் பொங்கல் பண்டிகை நேரத்தில் வெளியான ஒரு படம், ரசிகர்களின் கவனத்திற்கு சரியாக போகாதால், 2 நாட்களில் அந்த படத்தை தியேட்டர்களில் இருந்து நீக்கி விட்டு மீண்டும் சில வாரங்களில் அதே படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வது என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கிறது.
தேஜாவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அரவிந்த் சீனிவாசன். அவரது இயக்கத்தில் கிஷன்தாஸ் நடிப்பில் உருவான படம் தருணம். இந்த படம் கடந்த பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை இணையத்தில் முன் வைத்தனர்.
இந்த படத்தில் கிஷன் தாஸூக்கு ஜோடியாக ஸ்ம்ருதி நடித்திருந்தார். படத்தில் பாடல்களுக்கு தர்புகா சிவா இசையமைத்திருந்தார். அஸ்வின் ஹேமந்த் பின்னணி இசை அமைத்திருந்தார். பொங்கல் அன்று வெளியான இந்த படம் இரண்டே நாட்களில் திரையிடுவது நிறுத்தப்பட்டு படம் நீக்கப்பட்டது. போதிய தியேட்டர்கள் கிடைக்காமலும், ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து செல்ல வசதியான நேரங்களில் தருணம் படத்தின் காட்சி நேரம் இல்லாததும் படத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
பொங்கலுக்கு மதகஜ ராஜா வணங்கான் நேசிப்பாயா கேம் சேஞ்சர் உள்ளிட்ட பல படங்கள் வெளியான நிலையில், தருணம் நல்ல படமாக இருந்தும் போதிய தியேட்டர்கள் இல்லாமலும் போதிய காட்சிகள் திரையிட வாய்ப்பு இல்லாமலும் ரசிகர்கள் கவனத்திற்கு போகாமல் இந்த படம் படுதோல்வியை சந்திக்கும் நிலை உருவானது.
இதையடுத்து தருணம் படத்தை நீக்கிக் கொள்வதாகவும் மீண்டும் இந்த படத்தில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்திருந்தது. படத்தின் நாயகன் கிஷன் தாஸூம் தனியாக வீடியோ பதிவிட்டு இந்த தகவலை தெரிவித்து இருந்தார். இப்போது தருணம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 31ம் தேதி (நாளை மறுதினம்) தருணம் படம் மீண்டும் ரிலீஸ் ஆகிறது. இது திரில்லர் கதைக்களத்தை கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.





