விஜய் நடித்திருக்கும் கோட் திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. இதனையொட்டி திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்பட்டு வருகிறது. எடுத்த எடுப்பிலேயே பல திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட் தீர்ந்துவிட்டன. இதனால் பிற திரையரங்குகளில் முன்பதிவு தொடங்குவதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த என்டர்டைன்மென்ட் படமாக இது உருவாகி இருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் இதன் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் டிரைலர் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் அமைந்தது. இந்த ட்ரெய்லரிலேயே தான் நிறைய விஷயங்களை கூறி இருப்பதாகவும், ஆனால் ரசிகர்கள் சரியாக டிகோட் செய்யவில்லை என்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்த காட்சிகள் இருக்கும் எனவும், நிச்சயமாக யாரும் அடுத்த சீனை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் உறுதியாக தெரிவித்து இருந்தார். படத்தில் ரசிகர்களுக்கு ஏராளமான ஆச்சரியங்கள் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
முக்கியமாக அஜித்தின் ரெஃபரன்ஸ் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்து இருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் அது எந்த வடிவில் உள்ளது என்பதை தற்போது தன்னால் கூற முடியாது என்று அவர் பேசியிருந்தார். மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில் காவலன் திரைப்படத்தின் காட்சி ஓடிக் கொண்டிருக்கும். அதுபோல் இதிலும் ஏதாவது ஒரு சீன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் வகையில் இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் ஆக அது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் வருவார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.





