பாடகி கெனிஷாவுடன் நெருங்கிய நட்பில் நடிகர் ரவி மோகன் இருந்து வரும் நிலையில், அவரது மனைவி ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கண்ணியமாக இருக்க நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்த காலத்தில் என்னை சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள், வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்து விட்டது. எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு பணமோ அதிகாரமோ அல்லது கட்டுப்பாடோ காரணம் அல்ல.
எங்கள் வாழ்வில் வந்த 3வது நபரே இதற்கு காரணம். எங்களை பிரித்தது வெளியில் இருந்து வந்த ஒருவர்தான். உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வின் இருளை கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர் சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யும் முன்பே எங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டார்.
எனக்கு கட்டுப்படுத்திய மனைவி என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. என் கணவரை அன்பாக பார்த்து அவரை தீய பழக்க வழக்கங்களில் இருந்து பாதுகாத்து கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால் அப்படியே இருக்கட்டும். எந்த ஒரு உண்மையான மனைவியும் தன் கணவரின் நலனுக்காக எதைச் செய்வாரோ அதையே நானும் செய்தேன். அதற்காக தவறான பட்டங்களை சுமக்கிறேன்.
உண்மையில் என் பிடியிலிருந்து தப்பிச் செல்ல நினைத்தவர் அவரது பெற்றோர் வீட்டுக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு எங்கள் வாழ்வில் பிரச்சனை உண்டாக்கியவர் வீட்டு கதவை தட்டியது ஏன்? இன்று என் பிள்ளைகள் படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் துன்புறுத்தியதாக சொல்வது மனம் வலிக்கிறது. நாங்கள் இதுவரை எடுத்த அனைத்து பொருளாதார முடிவுகளும் இருவரும் சேர்ந்து எடுத்தவை. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
என் தனிப்பட்ட பிரச்னையை பொதுவெளியில் கூறுவதற்காக என் பிள்ளைகள் குடும்பத்தார் நண்பர்களிடம் மன்னிக்க வேண்டுகிறேன். என் சுய கௌரவத்திற்காக நான் இதை செய்ய வேண்டி உள்ளது. இத்தனை ஆண்டுகள் உங்களுக்காக வாழ்ந்து ஒருத்தியை உதறித் தள்ள முடிவு எடுத்த நீங்கள் அதை கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம். அப்படி செய்யாதது வேதனையாக உள்ளது.
எல்லா உண்மையும் தெரிந்த என் கணவரே என்னை மறுக்கிறார். அவருக்கு நிம்மதி கிடைக்க விரும்புகிறேன். ஆனால் உங்களுக்கு துணை நின்ற ஒருவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் அது கிடைக்காது. நான் பலவீனமானவள் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன். ஒருபோதும் தாழ்ந்து போக மாட்டேன். இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை. ஏனென்றால் நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்க காத்திருக்கிறேன் என்று ஆர்த்தி ரவி அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.





