அசுரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தைதான் எடுப்பதாக இருந்தது. இதற்கான போஸ்டரும் வெளியானது. டெஸ்ட் சூட்டிங்கும் நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டனர். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் அந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகளுக்கு வி எப் எக்ஸ் பணிகள் அதிகம் தேவைப்படுவதால், படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில், வெற்றிமாறன் விடுதலைப் படத்தை இயக்கச் சென்று விட்டார். இதேபோல் சூர்யாவும் கங்குவா படத்தில் கவனம் செலுத்த புறப்பட்டார். இதில் விடுதலை திரைப்படத்தின் கதைக்குள் ஆழமாக சென்ற வெற்றிமாறன் அதனை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்து அப்படி வெளியிட்டார்.
இதில் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இரண்டாம் பாகம் கலவையான விமர்சனத்தை பெற்றது. சொல்லப்போனால் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்களிலேயே விடுதலை 2 திரைப்படம்தான், சுமாரான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் என்று கூறலாம். இப்படியான சூழலில் அடுத்ததாக வெற்றிமாறன், யாரும் எதிர்பார்க்காத வகையில் சிம்புவுடன் கைகோர்த்துள்ளார்.
இதற்கான டெஸ்ட் சூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட வெற்றிமாறன், சிம்புவுடன் தான் அடுத்த திரைப்படம் செய்ய இருப்பதாகவும், இந்த திரைப்படம் வடசென்னை உலகத்தில்தான் வரும் என்றும், ஆனால் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் வட சென்னை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இதிலும் இடம் பெறுவார்கள் என்றும் விளக்கி இருந்தார்.
மிக முக்கியமாக இந்த திரைப்படத்திற்கு என் ஓ சி சான்றிதழ் பெறுவதற்கு தனுஷ் எந்த ஒரு தொகையும் கேட்கவில்லை என குறிப்பிட்டு இருந்தார். வாடிவாசல் திரைப்படத்திற்கு இன்னும் காலம் வேண்டும் என்பதால் அது தள்ளிப் போடப்பட்டிருப்பதாகவும் கூறினார். இப்படியான சூழலில் வெற்றிமாறன் சிம்பு திரைப்படத்திற்கான ப்ரோமோ வீடியோ இன்னும் வெளியாகாததால், படம் கைவிடப்பட்டதாக பலரும் கூறினார்கள். தயாரிப்பு நிறுவனம் மாறுவதே இதற்கு காரணம் என்றும் பேசினார்கள்.
ஆனால் அந்த தகவல் அனைத்தும் வதந்தியே என்று பேசப்படுகிறது. ப்ரோமோ வீடியோ தயாராக இருப்பதாகவும் ஆனால் அதனை யூடியூபில் வெளியிடப்பட குழு திட்டமிடவில்லை என்றும் கூறப்படுகிறது. நேரடியாக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும், அதன்படி கூலி படத்தின்போது இந்த வீடியோ வெளியாகும் என்றும் பேசுகிறார்கள். அது மட்டுமல்ல செப்டம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் இதன் சூட்டிங் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.





