கடந்த 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு திரைப்படம் நல்ல கதையசம்சத்துடன் இருந்தால் மிகப்பிரமாதமான ஒரு வெற்றியை பெற்றுவிடும். படத்தின் கதைக்களமே வெற்றியை தீர்மானிக்கும். படம் பார்க்கும் ரசிகர்களே படம் குறித்து மற்றவர்களிடம் பேசி படத்தை பலமடங்கு வெற்றி பெறச் செய்துவிடுவார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் படம் தயாரிப்பு செலவுடன் மட்டுமின்றி படத்தின் பிரமோசன் செலவும் பல கோடி ரூபாய் வரை பட்ஜெட்டில் சேர்க்கப்படுகிறது. படத்தில் நாயகன் நாயகி உள்ளிட்ட முக்கிய நடிகர்களை கமிட் செய்யும்போது படம் ரிலீஸாகும் முன்பு சில வாரங்கள், படம் ரிலீஸான பிறகு சில வாரங்கள் என அவர்கள் தேதி ஒதுக்கி தரவும் அதற்கும் சேர்த்து தயாரிப்பாளர்கள் சம்பளத்தை கூடுதலாக அவர்களுக்கு தரும் நிலைமை நீடிக்கிறது.
எப்போதுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். இந்த பழமொழி இந்த டிஜிட்டல் உலகத்திலும் பொருந்துகிறது. அதாவது ஒரு படத்துக்கு செய்யப்படும் பிரமோசன் அந்த படத்தின் வெற்றிக்கு நிச்சயமாக வழிவகுக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் தேர்டு லுக் போஸ்டர்கள் வெளியாவது அந்த படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் தூண்டி விடுகிறது.
அடுத்தடுத்து பர்ஸ்ட் சிங்கிள் செகண்ட் சிங்கிள் பாடல்கள் வெளியாவது டீசர் வெளியீடு டிரெய்லர் வெளியீடு இசை வெளியீட்டு விழா என அனைத்துமே அந்த படம் குறித்த ஆர்வத்தை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்து விடுகிறது. இதுதவிர முக்கிய நகரங்களுக்கு நடிகர் நடிகை இயக்குனர் என படக்குழு சென்று அங்குள்ள ரசிகர்களை நேரில் சந்திப்பது படத்துக்கு இன்னும் கூடுதல் பலத்தை சேர்க்கிறது. படம் தாறுமாறான வெற்றிக்கு இது வழிவகுக்கிறது.
ஆனால் இது இருபுறமும் கூர்மையான கத்தியை போன்ற ஒரு நிலைதான். படம் மக்களுக்கு பிடித்து விட்டால் இந்த பிரமோசன் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். ஆனால் படம் சொதப்பி விட்டால் இந்த பிரமோசனே படத்துக்கு பிரதான வில்லனாக மாறிவிடும். அப்படிதான் இந்தியன் 2 தக்லைஃப் கங்குவா கேம் சேஞ்சர் போன்ற படங்கள் பலத்த அடி வாங்கின. அதிலும் தக்லைஃப் படத்தை இணையத்தில் கழுவி கழுவி ஊற்றி அசிங்கப்படுத்தினர்.
அதனால் கூலி படம் பிரமோசனில் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஹீரோ ரஜினிகாந்தும் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் முடிவு செய்திருக்கின்றனர். ஏற்கனவே படத்துக்கு தேவையான வைப் கிடைத்துவிட்டது. மேலும் மேலும் அதை அதிகரித்து சிக்கலாக்கி கொள்ள வேண்டாம் என்று பெங்களூரு ஐதராபாத் மும்பை போன்ற நகரங்களில் திட்டமிட்டிருந்த பிரமோசன் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடக்கும் கூலி இசை வெளியீட்டு விழாவை டிரெய்லர் வெளியிட்டு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி போல சிம்பிளாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.





