நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் துரோகி போன்ற படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. இவர் நடிகர்கள் சிவகார்த்திகேயன் ரவிமோகன் ஸ்ரீலீலா அதர்வா உள்ளிட்டோர் நடித்த பராசக்தி என்ற படத்தை இயக்கினார். இது நடிகர் சிவகார்த்திகேயனின் 25 வது படமாகும். பராசக்தி படம் கடந்த பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.
கடந்த 1960களில் தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்துக்கு ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்தது. பிறகு ஓடிடி தளத்தில் வெளியான போதும் பராசக்தி படத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்த்து ரசித்தனர்.
ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வரவேற்பையோ வசூலையோ குவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயனை காட்டிலும் அதிகளவில் கவனமும் வரவேற்பையும் பெற்றவர் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ரவிமோகன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பராசக்தி படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா, தனக்கு 8.39 கோடி ரூபாய் சம்பள பாக்கியை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ் இதுவரை வழங்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 8.39 கோடி ரூபாய் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் தனது சம்பள பாக்கியை முழுமையாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் வரை டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இதயம் முரளி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் இயக்குனர் சுதா கொங்கரா அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ் வருகிற ஜூலை 8ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா சம்பள பாக்கிக்காக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து இருப்பது தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பராசக்தி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தவர் அதர்வா. அவர் நாயகனாக நடித்துள்ள படம்தான் இதயம் முரளி என்பதும் குறிப்பிடத்தக்கது.





