ஒரு நடிகர் எப்போதுமே ஒரே மாதிரியான கேரக்டரில் நடித்துக்கொண்டு இருந்தால் ஒரு கட்டத்துக்கு பிறகு அந்த நடிப்பு, அந்த நடிகருக்கும் சலித்து விடும், அவரது படங்களை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் வெறுத்து விடும். ஆனால் இன்னும் சில ஹீரோக்கள், தங்களது ஹேர்ஸ்டைலை கூட மாற்றாமல், ஒரே மாதிரியாக தான் நடித்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.
அதனால்தான் கமல்ஹாசன், விக்ரம் போன்ற நடிகர்கள் படத்துக்கு படம் தங்களது கெட்டப்பில், கேரக்டர்களில் வித்யாசம் காட்டி நடிக்கின்றனர். புது புது சவால்களை எதிர்கொண்டு தங்களது நடிப்பில் அடுத்தடுத்த நிலைகளுக்கு நகர்கின்றனர். அதனால்தான் அவர்கள் நடித்த படங்கள் என்றாலே ரசிகர்கள் நிச்சயமாக புதுமையாக இருக்கும் என்று தியேட்டர்களுக்கு படையெடுகின்றனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன், ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் படத்தில் 2ம் பாகத்தில்தான் கமல் நிறைய காட்சிகளில் வருவார். இடைவேளை வரை பகத் பாசில் உள்ளிட்ட பிற நடிகர், நடிகைகளின் காட்சிகளே அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த விஷயம், படத்தின் கிளைமேக்ஸில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம்தான். படத்தில் கடைசியில் சில நிமிடங்களே வரும் காட்சி என்றாலும், ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது.
ஆனால் இந்த ரோலக்ஸ் கேரக்டரில் முதலில் நடிக்க மறுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படி ஒரு வில்லனாக அவர் நடித்து, அதனால் ரசிகர்கள் மத்தியில் வேறு மாதிரியான பார்வை வந்துவிடுமே என்றும் அவர் நடிக்க மறுத்திருக்கிறார். ஆனால், நடிகர் கமல்ஹாசன்தான் அந்த கேரக்டரில் நடிகர் சூர்யா தான் நடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி, சூர்யாவை சம்மதிக்க வைத்திருக்கிறார்.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சூர்யா, கமல் சார் எப்போதுமே எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன். அவரே எனக்கு போன் செய்து, இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாக சொன்னபோது என்னால், மறுக்கவே முடியவில்லை. நீங்கள் எப்போது ஒரு விஷயத்துக்காக பயப்படுகிறீர்களோ, அந்த விஷயத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும். வேண்டாம் என சொல்ல நினைத்த நான், கடைசி நிமிடத்தில், இந்த படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க முடிவு செய்து சம்மதித்தேன். இதை கமல் என்ற மனிதனுக்காக மட்டுமே செய்தேன் என்று சூர்யா அதில் கூறியிருக்கிறார்.





