நடிகர் சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.
இதில் கதாநாயகியாக திஷா பதானி நடித்திருக்கிறார். பாபி தியோல் வில்லனாக மிரட்ட, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி, கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அண்மையில் படத்தில் இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் இரண்டாவது சூர்யாவின் கெட்டப் நன்றாக இருப்பதாக பலரும் கூறினார்கள்.
பூர்வ ஜென்மத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் தெலுங்கு உட்பட பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் இந்த திரைப்படம் தயாராகும் சூழலில், தற்போது படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இருவரும் பேட்டி ஒன்று அளித்தனர். அதில் சூர்யா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அண்மையில் அஜித் சாரை நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், இப்போது தெரிகிறதா நான் ஏன் சிவாவை விடவில்லை என்று எனக் கூறினார்.
மற்ற மொழிகளில் பாகுபலி, கல்கி, ஆர் ஆர் ஆர் போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்கள் வந்துவிட்டன. கங்குவா தமிழில் அதற்கான ஒரு பெரிய முன்னெடுப்பிற்கான திரைப்படமாக இருக்கும். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு உலகத்தை யாரும் இதுவரை அறிமுகப்படுத்தி இருக்க மாட்டார்கள். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கான சூட்டிங் ஒரு நாளில் வெறும் பாதிநாள் மட்டும் தான் எடுக்கப்பட்டது.
அந்த கதாபாத்திரம் மீது இத்தனை ஒரு அன்பு, காதலும் இருக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து ஒரு தனி படம் எடுப்பதற்கு லோகேஷ் கனகராஜ் என்னுடன் கலந்துரையாடினார். எங்களுடைய கமிட்மெண்டுகளில் இரும்பு கை மாயாவி திரைப்படமும் இருக்கிறது. காலம் தான் இதற்கான பதிலை கூறும். என்று சூர்யா பேசி இருக்கிறார்.





