நடிகர்கள் சூர்யா, கார்த்தி, அவரது அப்பா சிவக்குமார், ஜோதிகா என இந்த நால்வருக்கும் மிக முக்கியமான நபராக இருந்தவர் தங்கதுரை. பல ஆண்டுகளாக அந்த குடும்பத்துக்கு பேமிலி மேனேஜராக இருந்தவர்தான் தங்கதுரை. சிவக்குமார் குடும்பத்தில் அவரும் ஒருவராக இருந்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றி வந்தவர்.
குறிப்பாக கார்த்தி, சூர்யா, ஜோதிகா ஆகியோரது படங்களுக்கான கால்ஷீட், சம்பள விவரம், சம்பள பாக்கியை வசூலிப்பது என பல விஷயங்களில் வலதுகரமாக செயல்பட்டு வந்த அவரை, கடந்த வாரத்தில் அனைத்து விஷயங்களில் இருந்தும் விலக்கி, வெளியேற்றி விட்டது சிவக்குமார் குடும்பம். சாப்பாடு இல்லாமல் கூட சூர்யா இருந்துவிடுவார். தங்கதுரை இல்லாமல் எப்படி அவர் சமாளிக்க போகிறார் என்று பலரும் கலாய்க்கும் நிலை ஏற்பட்டது.
அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் திடீரென வெளியேற்றப்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. பணம் விவகாரத்தில் ஏதும் அதிருப்தியை ஏற்படுத்தினாரா என்று பலரும் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். ஆனால், பருத்திவீரன் ஞானவேல்ராஜா பிரச்னையில் சூர்யா குறித்த தேவையற்ற வதந்திகளை பரப்பியதாகவும் ஒரு தகவல் உள்ளது.
ஆனால் உண்மையான காரணம் என்னவென்று தெரியாத நிலையிலும், தங்கதுரை மீது அதிகப்படியான கோபமோ, வெறுப்போ இல்லை என்பதை சமீபத்திய ஒரு செயலை வெளிப்படுத்தி, சூர்யா அசத்தி இருக்கிறார். அதுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. அதில் குரும்பூரை அடுத்துள்ள நாலுமாவடி என்ற ஊர்தான், தங்கதுரையின் சொந்த ஊர். அங்கு அவரது உறவினர்கள் ஏராளமான இருக்கின்றனர். இந்த மழை வெள்ளத்தால் அந்த நாலுமாவடி பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த நடிகர் சூர்யா, உடனடியாக தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளை சேர்ந்த தனது மன்ற நிர்வாகிகளை அழைத்து, தங்கதுரை ஊரான நாலுமாவடியில் பலத்த சேதம், மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு சென்று நிவாரண பணிகளை செய்யுங்கள். அங்குள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அறிவுறுத்தியுள்ளார். இப்படி பழைய பாசத்தை மறக்காம, தங்கதுரை ஊர்க்காரங்களுக்கு உதவி செய்ய சொல்லியிருக்காரே சூர்யா என்றுதான் அவரை பாராட்டி வருகின்றனர்.





