தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞராக இருப்பவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியோ ஜாக்கி, கிரிக்கெட் வர்ணனையாளர், காமெடி நடிகர், ஹீரோ நடிகர் இப்போது டைரக்டர் என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த நிலைகளில் வெகுவேகமாக ஆர்ஜே பாலாஜி வளர்ந்து வருகிறார். இப்போது சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி டைரக்சன் செய்து வருகிறார்.
தேவி, கவலை வேண்டாம், ரன் பேபி, நானும் ரவுடிதான், புகழ் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக இருந்த ஆர்ஜே பாலாஜி, எல்கேஜி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. கோகுல் இயக்கிய சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
தற்போது நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி டைரக்சன் செய்து வருகிறார். கோவையில் உள்ள தமிழ்நாடு அக்ரிகல்சர் யுனிவர்சிடியில் கோவில் செட் அமைத்து ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. சூர்யா, திரிஷா, லப்பர் பந்து நடிகை சுவாசிகா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். நடிகர் விஜய்க்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஆர்ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் படம் ரிலீஸாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செல்வராகவன், பாலாஜி சக்திவேல், கர்ணாஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். சிறையில் நடக்கும் சம்பவங்களை கொண்ட கதைக்களமாக இந்த படம் உருவாகி உள்ளது.
சொர்க்கவாசல் படம் வெளியான நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்தி என்பவர், புகார் கூறியிருக்கிறார். தன்னிடம் ஸ்கிரிப்ட் வாங்கிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று, கதை ஏற்கப்படவில்லை, நிராகரித்து விட்டதாக கூறிவிட்டு இப்போது அந்த கதை சொர்க்கவாசல் படமாக வெளிவந்து இருப்பதாக குற்றச்சாட்டு கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து நாளைய இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், சென்னை சைதாப்பேட்டை கிளை சிறை கைதிகளை நான் சந்தித்த அனுபவங்களை கிளைச்சிறை என்ற பெயரில் ஒரு கதையாக எழுதினேன். அதன் முழு ஸ்கிரிப்ட்டையும் ட்ரீம் வாரியா் நிறுவன அலுவலகத்துக்கு நேரில் சென்று தந்தேன். ஆனால் இந்த கதை ஏற்கப்படவில்லை என எனக்கு மின்னஞ்சல் வந்தது. தற்போது என் கதை சொர்க்கவாசல் படமாக மாறியுள்ளது, என்று அவர் கூறியிருக்கிறார்.





