தமிழ் சினிமாத்துறையில் தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பது போலவே கேரளாவில் மலையாள சினிமா நடிகர்கள் சங்கம் அம்மா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா சங்கத்தின் தலைவராக நடிகர் மோகன்லால் செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டில் மலையாள நடிகைகள் சிலர் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தது பெரிய விவகாரமாக மாறியது.
நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டதால் மலையாள சினிமாவில் பரபரப்பு அதிகரித்தது. இதையடுத்து அம்மா நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அம்மா சங்கம் கலைக்கப்பட்டது.
மீண்டும் இப்போது மலையாள நடிகர் சங்கம் (அம்மா) தேர்தல் கேரளாவில் நடைபெற்றது. இதுவரை நடிகர் சங்கத் தலைவராக இருந்த மோகன்லால் ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் அவர் போட்டியிட விரும்பாததால் பலரும் அம்மா சங்கத்தில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு போட்டியிட்டனர்.
இந்த நிலையில் நடிகை ஸ்வேதா மேனனும் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாட்ஷா பட வில்லன் நடிகர் தேவன் போட்டியிட்டார். ஸ்வேதா மேனனின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக அவர் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி, அம்மா நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று பேசப்பட்டது.
அவர் எப்போதோ ஒரு பேட்டி ஒன்றில் பேசிய சர்ச்சையான கருத்தை முன்வைத்தும் அவர் மீது போலீசில் வழக்கும் தொடரப்பட்டது. நடிகை ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை நீதிமன்றம் நிறுத்தி வைத்துவிட்டது. இந்நிலையில் இன்று நடந்த மலையாள நடிகர் சங்க தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று தலைவராக தேர்வாகியுள்ளார்.
மலையாள நடிகர் சங்கத்தில் (அம்மா) தலைவராக ஒரு பெண் முதன்முறையாக தேர்வாகி இருப்பது கேரளா சினிமா வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். பல்வேறு சர்ச்சைகளையும் கடுமையான எதிர்ப்புகளையும் தாண்டி ஸ்வேதா மேனன் இந்த தலைவர் பதவியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அரவாண் நான் அவன் இல்லை 2 சிநேகிதியே துணை முதல்வர் உள்ளிட்ட தமிழ் படங்களில் ஸ்வேதா மேனன் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





